புதன், 23 அக்டோபர், 2019

தமிழகத்தில் பாஜகவின் ஜாதி அரசியல் தந்திரம் எடுபடுமா?

மின்னம்பலம் :  சுப .குணராஜன் : அதிருப்தி இருந்தாலும் பலியாகவில்லை
தமிழ்நாட்டை, அதன் திராவிட அடித்தளத்தைச் சாய்க்கும், பாஜகவின் திட்டங்களில் பிரதானமானது சாதிக் கட்சிகளை அல்லது சாதிக் கட்சித் தலைமைகளை வளைப்பது. இந்த நடவடிக்கை நீண்டகாலத் திட்டம். இந்து அடையாளமும் சாதியும் இணை பிரியாதவை என்பதால் அதிலொன்றும் ஆச்சரியமில்லை. ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, பஜ்ரங்தள் எனக் களம் கண்டபோது அநேகமாக எண்ணிக்கைப் பெரும்பான்மை சாதிகள் அந்த வலையில் விழவில்லை அல்லது அந்த வாய்ப்பை நல்வாய்ப்பென அவை கருதவில்லை.
திராவிட அரசியலின் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை சாதிகளின் அரசியல் அதிகாரத்துவ முன்னிலையைத் தடுக்க முடியாத பார்ப்பன மற்றும் மொழிவாரி சிறுபான்மைச் சாதிகளே அதன் ஆதரவு சக்திகளாயின. ஆனால், அந்த எண்ணிக்கை சிறுபான்மையால் எந்தவித வலுவான, கருத்தியல் தள, அரசியல்கள இடையீட்டையும் நிகழ்த்த இயலவில்லை. தங்களுக்கு உரிய அதிகார பகிர்வைத் திராவிட அரசியலில் பெற முடியவில்லை என்ற அதிருப்தி நிலவியபோதும், தலித் / தாழ்த்தப்பட்ட சாதிகளும் அதற்குப் பலியாகவில்லை. அது பழைய நிலவரம்.

கவுண்டர்களிடம் நுழைய முடியவில்லை
மோடியின் அகில இந்திய அரசியல் நுழைவுக்கான களம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கியதும் நான்கைந்து சாதிகள் மீதான கவனக் குவிப்பு நடந்தது. அவர்களில் தென்மாவட்ட நாடார்கள், கொங்குப் பகுதி கவுண்டர்கள் ஆகியோர் வாஜ்பாய் காலத்து பாஜக அரசியலிலேயே முக்கியமான பங்கு வகித்தவர்கள். உள்ளபடியே வாஜ்பாய் அரசு காலத்து பாஜக அரசியலில் வெள்ளாளக் கவுண்டர்களே அதிகாரம் பெற்றனர். கோவைக்கும் இந்துத்துவ அரசியலுக்குமான தொடர்பு கொஞ்சம் சிடுக்கானது. முதலில் அந்த முரண் கேரளத்திலிருந்து இறக்குமதியானது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டின் முதல்நிலை தொழில் நகரம் என்ற வகையில், முதல்நிலை காஸ்மோபாலிடன் நகரமும் அதுவே. ஆனால் அதன் பயன் விளைவாக உள்ளார்ந்த மதவாத முரண்களும் உயிர்பிடிக்கவே செய்தது. அதன் உச்சக்கட்டம் கோவை குண்டுவெடிப்பு. விளைவு கோவை திராவிட / கம்யூனிச பகுதி என்ற நிலையிலிருந்து சரிந்து இந்துத்துவ அரசியல் தாயகமானது. அந்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டது அந்தப் பிரதேசத்தின் பெரும்பான்மை சாதியான கவுண்டர் சாதி. ஆனால், இந்துத்துவ அரசியலை மேற்படி சாதியின் பெரும்பான்மைக்குள் நகர்த்துவது என்ற தளத்தில் வெற்றி பெற முடியவில்லை. காரணம், எம்ஜிஆர் காலத்திற்கு பின்னான அஇஅதிமுக அரசியலில் அவர்கள் பெற்றிருந்த முன்னுரிமை. அந்த நிலை ஜெ – சசி ஆட்சி காலத்தில் இன்னும் வலுவானது அதற்கு முழுமையான தடையானது. அஇஅதிமுகவே ஒரு வகையில் திராவிட அரசியலின் மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து விலகி, இந்து நம்பிக்கைவாதக் கட்சியானது கூடுதல் பலவீனமானது.

பலம் தந்த குமரி
கன்னியாகுமரி மாவட்ட ‘இந்து’ அரசியல் கொஞ்சம் வேறுபாடானது. 1956ஆம் ஆண்டின் மொழிவாரி மாநில அமைப்பு வரை கேரள திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த அந்த மாவட்ட அரசியலில் கேரள சாயல் அதிகம். தமிழ்நாட்டில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகங்கள் பரவி வாழும் மாவட்டத்தின் மக்கள்தொகை கணிசமான சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பைக் கொண்டது. அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ சமூக இருப்பு துலக்கமானது.
இந்தக் கிறிஸ்தவ சமூகத்திலும், மீனவர் மற்றும் நாடார் சமூகங்கள் பிரதானமானவை. மீனவர்கள் பெரும்பான்மையாக அல்லது முற்றிலுமாக கிறிஸ்தவர்களாக இருக்க, நாடார்கள் இந்துக்கள் / கிறிஸ்தவர்கள் எனப் பிளவுண்டனர். ஆனாலும் கிறிஸ்துவம் சாதியை வெல்ல முடியாததற்கு சாட்சியம் இந்த மாவட்டத்து அரசியலே.
கிறிஸ்துவத்துக்கு எதிரான முனைப்புகளில் அதன் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பக் கால நடவடிக்கையின்போதே இங்கு காலூன்றி விட்டது இந்துத்துவ அரசியல். அதிலும் ஆர்எஸ்எஸ் வடிவில். ஆனாலும் குமரி மாவட்ட அரசியலில் காங்கிரஸ் தேசியவாதமும், இடதுசாரி தேசியவாதமுமே வெகுகாலம் கோலோச்சின. இந்துத்துவ தேசியவாதம் எழுந்து வந்தபோது முதலில் கரைந்தது இடதுசாரிகள். அதைத் தொடர்ந்தது காங்கிரஸ். திராவிடம் தேசியங்களை அடியோடு வீழ்த்திய தமிழ்நாடு நிலை அங்கில்லை. எனவே, இடது மற்றும் காங்கிரஸ் தேசியங்களின் இழப்பு பாஜகவின் பலமாகிப் போனது.
நாடார்களின் அரசியல்
இன்றும் அமைப்பு ரீதியாக பாஜக இருப்புக்கொண்டிருக்கும் தமிழ் நிலம் குமரியே. ஆனால் நாடார்களின் குமரி மாவட்ட அரசியல் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செலவாணியாவதில்லை. சாதி என்ற தளத்திலேயே இணைவு காண இயலாத இரு தொகுப்புகள் அவை. ஐந்து ஆண்டுக் காலம் மோடி அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் குமரி தவிர்த்த நாடார்வாழ் மாவட்டங்களில் கால் மிதித்ததுகூட இல்லை. அதனால்தான் அஇஅதிமுகவுக்குத் தாவினார் சங்பரிவார் தொண்டர் மாஃபா பாண்டியராஜன், அவர் முதன்முறை விருதுநகர் தொகுதியில் ஜெயித்தது பாஜகவிலிருந்து தேமுதிகவுக்குத் தாவியே.
‘நிரந்தரம்’ கிடையாது
வடமாவட்டக் கட்சியும், வன்னியர்களின் ஒரே பிரதிநிதித்துவக் கட்சி என்பதாகக் கருதிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியை ‘வளைத்தது’ 2014 தேர்தல் கூட்டணி என்ற வகையில் மட்டுமே. மருத்துவர் ராமதாஸ் தனது நகர்வுகளைத் தீர்மானிப்பது ஆட்சி வாய்ப்பை வைத்தே. சென்ற முறை அன்புமணி வென்றும் மோடி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காததால், ஐந்து ஆண்டுகளும், மோடி ஆட்சியின் விமர்சகராகவே இருந்தார் என்பது கவனத்திற்குரியது. ஆனால் மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனவே அரசியலில் நிரந்தரப் பகையோ, நிரந்தர உறவோ இல்லைதான். ஆனால் ராமதாஸ் விஷயத்தில் அவரது அகராதியில் ‘நிரந்தரம்’ என்ற சொல்லே கிடையாது.
குப்பைத் தொட்டியில் ‘தேவர்’ அரசாணை
இப்போதைக்கு பாஜக / ஆர்எஸ்எஸ் லயத்திற்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் அரசியல் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி மட்டுமே. அதிலும் அவரது நிலைப்பாடு முற்றிலும் விபரீதமானவை. தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப் பெயர் தொடங்கி, எஸ்சி பட்டியலிலிருந்து நீக்கம் வரையான அனைத்து நிலைப்பாடுகளும் பொறுப்பற்றவை மட்டுமே. இது போன்ற தீர்மானத்தை முன்மொழிவதற்கான அதிகாரம் அவருக்கு இல்லவே இல்லை. ஒரே ஒரு மனிதர் ஆட்சேபம் தெரிவித்தாலும் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இயலாது. அதிகபட்சமாக விருப்பமற்றவர்கள், எஸ்சி சான்றிதழ் பெறாமல் இருக்க மட்டுமே உரிமை உண்டு. இதைவிடக் கவனிக்கவேண்டிய விஷயம், சாதிகளைப் பட்டியலில் சேர்க்கும் அல்லது விலக்கும் அதிகாரம் மட்டுமே அரசுகளுக்கு உண்டு. எஸ்சி / எஸ்டி என்றால் ஒன்றிய அரசு, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்றால் மாநில அரசு. ஆனால் சாதிகளை இணைத்து ஒன்றாக்குவது என்பது அவற்றின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவை. ஏற்கனவே முக்குலத்து சாதிகளை தேவர் என்ற ஒரு தொகுப்பாக்கி ஜெயலலிதா அரசு வெளியிட்ட அரசாணை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டதைக் கவனிக்க வேண்டும்.
கரைந்துபோன வரலாறு
தமிழ்நாட்டு அரசியல் களம் என்பது திராவிடம் மற்றும் தலித்திய இடையீட்டால் வெகுகாலமாய் சாதியம் குறித்த விழிப்புணர்வோடு இயங்குவது. அதன் பொருள் சாதிகளின் இருப்பையும் அவற்றின் பிணக்கான இயக்க விதிகளையும் மறுப்பதில்லை. மாறாக சாதியத் தொகுப்பை எதற்காக இணைப்பது என்பதில் தெளிவுள்ளது என்பதைக் குறிக்கவே. அதிலும் எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகள் ஒற்றையாக இருக்க / இயங்க ஒருபோதும் ஒப்புவதில்லை. அதிகபட்சமாக தலித் அல்லாத சாதிக் கட்சிகள் ஓர் அழுத்தம் தரும் குழுவாக இயங்க முடியுமன்றி வேறொன்றும் நிகழாது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களின் கட்சிகளில் மூன்றாவது அவதாரம். முதலாவது மாணிக்கவேலரின் காமன் வீல் பார்ட்டி, இரண்டாவது ராமசாமிப் படையாட்சியின் ‘ உழவர் உழைப்பாளர் கட்சி’. அவையும் ஆட்சி அதிகாரத்தில் தம்மைக் கரைத்தவையே. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் முக்குலத்தோர் கட்சியாக மெலிந்து கரைந்து போனதே நடந்தது. சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ நாடார்களின் கட்சியாக அங்கீகாரம் பெற்றதாகத் தெரியவில்லை. இதுபோல உருவான முத்தரையர் கட்சி, யாதவர் கட்சி என அனைத்தும் கரைந்து போனதே வரலாறு.
இறுதி மோதல்
சாதியும் தேர்தல் அரசியலும் பிரிக்கவே இயலாததுதான் எனினும், சாதிக் கட்சிகளின் அரசியல் ஒரு வரையறைக்குட்பட்டவை மட்டுமே. இந்துத்துவம் முயலும் சாதிய அரசியல் அதனை இறுதியாக வீழ்த்துவதாகவே மாறும் என்பதே இயக்க விதி. ஆம், இறுதி மோதல் இந்துத்துவத்துக்கும் சாதியத்துக்குமானதாகவே இருக்கும் என்பதே நகை முரண். எனவே இரண்டையும் ஒருசேர வீழ்த்துவதான அரசியலே இன்றைய தேவை.
கட்டுரையாளர் குறிப்பு: வீ. எம்.எஸ். சுபகுணராஜன்

இந்திய ஒன்றிய அரசின் வருவாய் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆய்வாளர் / எழுத்தாளர் . தமிழில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து எழுதி வருபவர். ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ பெரியாரின் சாதி சங்க மாநாடுகள் உரைத் தொகுப்பு நூலின் தொகுப்பாசிரியர், ‘சாதியும் நிலமும், காலனியமும் மூலதனமும்’, ‘சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும்’ நூல்களின் ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக