புதன், 23 அக்டோபர், 2019

கொல்கத்தா கால்சென்டர்களின் பயங்கர மோசடி: பிரிட்டன், யு.எஸ், ஐரோப்பிய மக்கள் பணம் சுருட்டல்.. வீடியோ


hindutamil.in/ : கொல்கத்தா, தி இந்து பிசினஸ்லைன்
கொல்கத்தா போலீஸ் துறையின் சைபர் பிரிவு போலீஸார் கடந்த வாரம் நகரின் மையத்தில் இயங்கி வந்த இரண்டு கால்சென்டர்களுக்கு சீல் வைத்தனர். அதாவது இந்த 2 கால்சென்டர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய மக்கள் சுமார் ஆயிரம் பேரிடம் மோசடி செய்து பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சைபர் கிரைமின் இந்த அதிரடி ரெய்டில் கொல்கத்தா நகர போலீஸார் 50 பேர் ஈடுபட்டு 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த 7 பேர்களின் வயதும் 29 முதல் 43 வயது வரை இருக்கலாம் என்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது. இது மிகப்பெரிய மோசடி கோடிக்கணக்கான ரூபாய்கள் இதில் புரள்வதாக அவர்கள் மேலும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது மோசடிப் பனிமலையின் ஒரு சிறு முகடு மட்டுமே என்கின்றனர் கொல்கத்தா சைபர் கிரைம் போலீஸார். மூத்த போலீஸ் அதிகாரிகள் தி இந்து பிசினஸ் லைன் நாளேட்டுக்குக் கூறும்போது நகர மையத்திலும் புறநகர்ப்பகுதியிலும் இது போன்று 12 கால்சென்டர்கள் இயங்கி வருகிறது என்றனர்.இன்னும் துருவினால் இது போன்ற கால்செண்டர்கள் மேலும் அகப்படலாம் என்றார்.

மோசடி எப்படி?
இப்போது நடந்து வரும் ஆன் லைன் மோசடிகள் போல்தான் இதுவும். குறிப்பாக ஐரோப்பாவில், பிரிட்டனில் அமெரிக்காவில் உள்ளவர்களை தொலைபேசியில் அழைத்து மைக்ரோசாப்ட் போன்ற உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் மிகப்பெரிய பதவியில் இருப்பதாகக் கூறிக்கொள்வர். கணினிப் பயனாளர்களிடையே ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி ஏதாவது மென்பொருளை அவர்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வைப்பர், அல்லது சில வேளைகளில் அவர்களது கணினிகளையே இவர்கள் இங்கிருந்து ஆபரேட் செய்யும் ரிமோட் ஆக்சஸும் மேற்கொள்வர். இதைச் செய்து முடித்த பிறகே பயனாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையைச் சூறையாடுகின்றனர்.
அதாவது கொல்கத்தாவில் உள்ள மோசடி கால் சென்டரிலிருந்து லண்டனில் இருக்கும் ஒரு பயனாளருக்கு தொலைபேசியில் அவரது கணினியில் வைரஸ் புகுந்துள்ளது என்று கூற வேண்டியது. இதனைச் சரி செய்ய அவசரசமாக சாஃப்ட்வேர் ஒன்றையோ அல்லது வைரஸ் எதிர்ப்பு டவுன்லோடு ஒன்றையோ பரிந்துரைப்பர். பயனாளர்கள் ஏமாந்து விட்டார்கள் என்பது உறுதியான பிறகு ஏதாவது ஒரு இணைப்பை அனுப்புவார்கள், அதை அவர்கள் கிளிக் செய்து விட்டார்கள் என்றால் அவர்களது வங்கி விவரங்கள் உட்பட சொந்த விவரங்களை மோசடிப்பேர்வழிகள் ஹேக் செய்து விடுகின்றனர். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அட்டை விவரங்களும் திருடப்பட்டு பணம் சுருட்டப்பட்டு விடும்.
சைபர் கிரைம் நிபுணர் ஒருவர் கூறும்போது, “இது போன்ற கால்சென்டர்கள் மோசடி செய்து தினசரி ரூ.4 லட்சம், 5 லட்சம் சம்பாதிக்கின்றனர். ஆண்டுக்கு சிலபல நூறுகோடி ரூபாய்கள் அடங்கிய மிகப்பெரிய உலகளாவிய மோசடியாகும் இது” என்றார்.
இவர்கள் இந்தியர்களை ஏமாற்றுவதில்லை, ஐரோப்பிய, அமெரிக்க, பிரிட்டன் மக்களை ஏமாற்றுவதினால் புகார் வந்தால் கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஏனெனில் கைது செய்து மோசடிக் கும்பலை கோர்ட்டில் நிறுத்தினால் கூட நீதிபதிகள் பாதிக்கப்பட்டோரை நேரில் வருமாறு கூறுவார். இது நடக்காத காரியம், அதனால் தண்டனை கிடைப்பது கடினம் என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.
எனவே லண்டன் போலீஸாரையும் அவர்களுக்கு இது தொடர்பாக வரும் புகார்களையும் இணைத்து கூட்டுறவு அடிப்படையில்தான் இதற்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர்.
--அபிஷேக் லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக