திங்கள், 14 அக்டோபர், 2019

பிசிசிஐ தலைவர் கங்குலி: செயலாளர் அமித் ஷா மகன்...

பிசிசிஐ தலைவர் கங்குலி: செயலாளர் அமித் ஷா மகன்மின்னம்பலம் : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முறைகேடு தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டது. லோதா குழு பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் அண்மையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, பிசிசிஐ நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

தலைவரான கங்குலி
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் இன்றுடன் (அக்டோபர் 14) முடிந்த நிலையில், தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார். இதுதொடர்பாக பிசிசிஐ உறுப்பினர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “பிசிசிஐயின் புதிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம். இறுதி அறிவிப்பு வரும் 23ஆம் தேதி வெளியாகும்” என்று குறிப்பிட்டார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, “அணியுடன் இணைந்து மாற்றத்தை நிகழ்த்தப்போகும் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் சில மாதங்களில் அனைத்தையும் சரிசெய்து இந்திய கிரிக்கெட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். 47 வயதான கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.பிசிசிஐ விதிப்படி ஒருவர் 6 வருடம் மட்டுமே கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாக இருக்க முடியும். ஏற்கனவே 5 வருடங்களாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி பதவி வகித்து வருவதால், வரும் 2020 செப்டம்பர் வரைதான் அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க முடியும்.

செயலாளராகும் அமித் ஷா மகன்
இதுபோல பிசிசிஐ செயலாளர் பதவிக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய ஷா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ குழுவின் உறுப்பினருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய ஷா பிசிசிஐ செயலாளராகவும், அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் தாமல் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதுபோல ஐபிஎல் சேர்மனாக பிரஜேஷ் பட்டேல் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
இந்த செய்தியினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எனது தந்தை ப.சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்தபோது, நான் பிசிசிஐ செயலாளராக ஆகியிருந்தால், ‘தேசியவாதிகளும்’, பக்தாஸ்களும் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றி இருப்பார்கள் தெரியுமா?” என்று கருத்து தெரிவித்துள்ளார்

 இந்தியாவில் அரசியலுக்கும் கிரிக்கெட்டுக்குமான பந்தத்தை பிரித்துப் பார்க்க முடியாது. தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவார், ஐசிசியின் தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போதைய உள் துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்துள்ளார். இதேபோல மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். அந்த வரிசையில் அமித் ஷாவின் வாரிசான ஜெய ஷா, தற்போது செயலாளர் பதவிக்கு வர இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக