ஞாயிறு, 27 அக்டோபர், 2019

மகாராஷ்டிரா.. ஹரியான .. பா.ஜ.க.வின் வாக்கு வங்கி பெரிதும் சரிந்துள்ளது!

அண்மையில் இரண்டு மாநில சட்டப்பேரவை களுக்கான தேர்தல்களும் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின.
கனவில் மிதந்த பா.ஜ.க. கூட்டணி
இரண்டு மாநில (மகாராட்டிரா, அரியானா) சட்ட சபைத் தேர்தல்களிலும் சரி, மற்ற இடைத்தேர்தல்களிலும் சரி, பிரதமர் மோடியும், தேர்தல் புலியாக வர்ணிக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவர்களது கூட்டணி கட்சிகளும், தங்களது வெற்றி மிக அபரிமிதமான வெற்றியாக அமையும் என்ற கனவில்தான் இருந்தனர்.
ஊடகங்களின் கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிந்த பின் வந்த Exit Polls முடிவுகள் என்பவைகளில் பெரும்பாலும், இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என்றே உறுதிபடக் கூறின!
தங்களது ஆசைகளை
கனவுக் குதிரைகளாக்கி ஓடவிட்டனர்!
எடுத்துக்காட்டாக, மகாராட்டிரத்தில் 288 இடங்களில் 200 இடங்களுக்குமேல் பா.ஜ.க. சிவ சேனா கூட்டணி கைப்பற்றும் எனவும், 90 இடங்கள் உள்ள அரியானாவில், 70 இடங்களுக்குமேல் பா.ஜ.க. கூட்டணிக்குக் கிடைத்து ஆட்சியை மீண்டும் பா.ஜ.க. அமைக்கும் என்றும் கூறினர்!
அதுமட்டுமல்ல, ஆங்காங்கே உள்ள எதிர்க்கட்சி கூட்டணிகள் முன்பு வைத்திருந்த இடங்கள் பலவற் றையும்கூட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) இழக்கும் என்றும்கூட எழுதித் தங்களது ஆசைகளை கனவுக் குதிரைகளாக்கி ஓடவிட்டனர்!

பா.ஜ.க.வின் வாக்கு வங்கி
பெரிதும் சரிந்துள்ளது!
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இவ்விரு மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், அதிதீவிர தேசியவாதம் (Hyper Nationalism) பேசியதோடு, பாகிஸ்தான் கண்டனம், காஷ்மீரில் 370 அரசமைப்புச் சட்டப் பிரிவு நீக்கம் - இவற்றைப்பற்றியும் பேசி, அதற்கான Referendum வாக்கெடுப்பு என்பதாக, குடியுரிமை சட்டம்பற்றியுமே பேசினர்.
சிக்கலான பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் போக்கல், விவசாயிகளின் வாழ்வாதார உயர்வுக்கான வழிகளையோ மற்ற முக்கிய மக்களின் வாழ்வாதாரத்தைப்பற்றியோ அதிகம் குறிப்பிட வில்லை.
ஆனால், (2019 இல்) கடந்த 6 மாதங்களுக்குமுன் பிரதமர் மோடி, பா.ஜ.க.வும் பெற்ற வாக்கு வங்கி - பெரிதும் சரிந்துள்ளது என்பது சுவரெழுத்துபோலத் தெரிகிறது!
மொத்தம் 10 நாடாளுமன்ற இடங்களைப் பெற்ற அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றி, 90 இடங்களில் (Assembly Segments) 79, அதேபோல மகாராட்டிரத்தில் 280 இடங்கள் மொத்தம் என்றால் அதில் பெற்ற வெற்றி 230 ஆகும்!
அவைகளுடன் இப்போது அக்கட்சி பெற்ற வெற்றியை ஒப்பிடும்போது பெரிய விரிசல், ஓட்டை அங்கே ஏற்பட்டுள்ளது; வாக்காளர்கள் ஆதரவு தேய்பிறையாகி வருகிறதே தவிர, வளர்பிறை யாகவோ அல்லது முந்தைய வெற்றி அளவு குறையாமலோ இல்லை.
பா.ஜ.க.வின் இறங்கு முகத்தின் தொடக்கம் என்பதற்கான அறிகுறி!
அரியானாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 58.2 சதவிகிதம் வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. இப் போது 36.2 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள் ளது!
51 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் (17 மாநிலங் களில் பரவலாக நடைபெற்றுள்ளது) 21 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கூட்டணி இப்போது பெற்றிருப்பது, இறங்கு முகத்தின் தொடக்கம் என்பதற்கான அறிகுறி போன்றதல்லவா?
அதுபோல இரண்டு நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றில்தான் பா.ஜ.க. (உ.பி.யில்) வெற்றி பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜ ராத்தில் 6 சட்டமன்ற இடைத்தேர்தலில் மூன்றை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது!
பா.ஜ.க.வுக்கு, எதிர்க்கட்சிகள் பலமான ஒருங்கிணைந்த வலுவான போட்டியைத் தர ஆயத்தமாகாத நிலையில், இந்த வெற்றிகள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும், அரியானா ஜே.ஜே.பி. கட்சி என்ற துஷ்யந்த் சவுதாலா கட்சியும், மகாராட்டிராவில் பிரகாஷ் அம்பேத்கரின் ஒடுக்கப்பட்டோர் கூட்டணி (ஜோதி பாபூலே - அம்பேத்கர்) இணை நிலைப்படுத்தப்பட்ட கட்சி நல்ல வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது, கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
‘கட்சி மாறிகளுக்கு' வாக்காளர்கள்
பாடம் கற்பித்துள்ளனர்
பா.ஜ.க.வின் ‘கட்சி மாறிகளுக்கு' வாக்காளர்கள் நல்ல பாடம் புகட்டும் அளவுக்கு நல்ல தோல்வியை தந்துள்ளார்கள்.
மகாராட்டிராவில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி என்பது அடிக்கடி உறவில் விரிசல் காணும் கூட்டணியாகவே உள்ளது. எந்த அளவுக்கு நிலையான அரசு வரும் என்பது சரியாக கணிக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்!
எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகாத நிலையில், குறிப்பாக ஏழை, எளிய, விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் உள்ள தொகுதிகளில் (பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளில்) காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது; முன்னாளில் இவை பா.ஜ.க. வசமிருந்தவை.
எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்
மத்தியில் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல், விவாதங்கள் இல்லாமலேயே மசோதாக்கள் பெரும்பான்மை கைதூக்கிகளால் நிறைவேற்றப்படும் ஜனநாயக உணர்வுக்கு எதிரானவற்றிற்கு எதிராக எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்!
ஊடகங்கள் இதுபோன்ற உண்மைகளை மறைக்காமல், நடுநிலை, பொது நிலையில் கருத்துச் சுதந்திரத்தை பறிபோகவிடாமல், எழுத, பேச முன்வருதல் அவசியம்.
சமூகநீதி பாதுகாப்பு அணியை அனைத்திந்திய அளவில் பலப்படுத்த இதுவே சரியான தருணம்
மும்பையில் டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் நல்ல முன்மாதிரியாக, ஒடுக்கப்பட்டோர் அம்பேத்கர் புலே பெயரை வைத்து ஒரு கூட்டணியைத் தொடங்கியது நல்ல பலன் தந்துள்ளது.
அதுபோன்ற முயற்சி வளரவேண்டும் - அகில இந்திய அளவிலும், தென்னாடு, வடநாடு, கிழக்கு, மேற்கிலும்.
காங்கிரஸ் தனது நிலையைப் பலப்படுத்தினால் மீண்டும் எழுவதற்கும் வாய்ப்பு உண்டு. எச்சரிக்கை மணியோசை எங்கும் இனி கேட்கத் தொடங்கட்டும். சமூகநீதி பாதுகாப்பு அணியை அனைத்திந்திய அளவில் பலப்படுத்த இதுவே சரியான தருணம்; ஒத்தக் கருத்துடையோர் ஒன்று சேருங்கள்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
26.10.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக