வியாழன், 31 அக்டோபர், 2019

.முஸ்லீம்கள் வெளியேற்றம்...புலிகளின் இனச்சுத்திகரிப்பு... 1990 அக்டோபர் 30 !

சிவசங்கரன் சுந்தரராசன் :
1981 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் யாழ்ப்பாணத்தில் 14,844 முஸ்லீம்கள் வசித்து வந்திருந்தனர். தாம் உடுத்திருந்த உடுப்புடனும் ஆகக்கூடியது 50 ரூபாய் பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து 14,400 முஸ்லிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில்இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில்5,000 பேரும் அடங்குவர். இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்
சி : அக்டோபர் 30 என்றால் ஈழத்தில் வாழும் முஸ்லீம்கள் வெளியேற்றம் தான். ஈழத்தில் பிரபாகரன் முன்னின்று இன சுத்திகரிப்பு நடத்தியதன் உச்சம் தான் யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றம் தான்
1990 களில் விடுதலைப் புலிகள் வடமாகாண முஸ்லீம்கள் மீது தமது இனத்துடைப்பை எவ்வாறு செய்தனர்?
கிழக்குமாகாணத்தில் தமது இனத்துவேச நடத்தையில் படுகொலை வரை செய்யத் துணிந்த புலிகள் அதன்பின் தமது கட்டுப்பாட்டில் இருந்த வடபகுதியிலும் தமது கைவரிசைகளை காட்டத் தொடங்கினர். கருத்தியல் ரீதியில் இனத்துடைப்பை நியாயப்படுத்த தமிழர்கள் மத்தியில் மெதுவாக நச்சு விதைகளை விதைக்க தொடங்கினர். பொது சிவில் நிர்வாகம் சீர்குலைந்த நிலையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான துப்பாக்கி பஞ்சாயத்தை அவர்கள் செய்தனர். அதில் முஸ்லீம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தமிழர்களுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. நீங்கள் தமிழர்களுக்கு கீழ்ப்பட்டுதான் வாழ வேண்டும் என கடுமையான எச்சரிக்கைகளும் நேரடியாக விடப்பட்டது.

இந்திய இராணுவம் இருந்த காலப்பகுதியில் அவர்கள் ஏனைய தமிழ் இயக்கங்களுடன் இணைந்து பலாத்காரமாக இளைஞர்களை பிடித்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்த இளைஞர்களை தம்மிடம் சரணடையுமாறு புலிகள் காலக்கெடு விதித்தனர். அதன்படி சரணடைந்த இளைஞர்களில் தமிழர்களை விடுவித்தனர். புலிகளோடு சேர விரும்பிய சிலரை தம்மோடு இணைத்துக் கொண்டனர். ஆனால் அவ்வாறு சரணடைந்த முஸ்லீம் இளைஞர்கள் விடுவிக்கபடவில்லை! கேட்டுச்சென்ற பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டது. இப்படியெல்லாம் ஒரு இனத்துடைப்பை நிகழ்த்துவதற்கான frame work குகள் போடப்பட்டன. ஆனால் இதெல்லாம் ஒரு மோசமான நிகழ்வை நோக்கிய ஏற்பாடுகளென வடக்கு முஸ்லீம்கள் உணரவில்லை.
இதன் பின்னர்தான் முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. சுமார் 1,500 முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். சாவகச்சேரி முஸ்லீம்களை வெளியேற்ற ஒரு திட்டமிட்ட நாடகபாணி நியாயத்தை உருவாக்கினர். சாவகச்சேரி சுல்தான் பேக்கரிக்கு பின்னால் முஸ்லீம்கள் பதுக்கிவைத்த ஆயுதங்கள் என்று சிலதை தமிழ் மக்கள் முன் காட்சிப்படுத்தினர். இதன்மூலம் ஈழவிரோத செயற்பாடுகளை முஸ்லீம்கள் செய்வதாக ஒரு சம்பவத்தை சோடித்து முழு முஸ்லீம்களுக்கும் எதிராக பொதுமைப்படுத்தி பிரச்சாரம் செய்தனர்.
இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் முசலிமுஸ்லீம்களும் தமது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றப் பட்டனர். யாழ்ப்பாண முஸ்லீம்கள் 1990 அக்டோபர் 30 இல் இரண்டு மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டனர். வாகனங்களில் வந்திருந்த விடுதலைப் புலிகள் அனைத்து முஸ்லீம்களையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கூடும்படி கட்டளை இட்டனர். அங்கு கூடியிருந்தோரை இரண்டு மணி நேரத்தினுள் நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அனைத்து முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1981 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் யாழ்ப்பாணத்தில் 14,844 முஸ்லீம்கள் வசித்து வந்திருந்தனர். தாம் உடுத்திருந்த உடுப்புடனும் ஆகக்கூடியது 50 ரூபாய் பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து 14,400 முஸ்லிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில்இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில்5,000 பேரும் அடங்குவர். இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இனச்சுத்திகரிப்பு இவ்வாறுதான் நடத்தி முடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக