வியாழன், 31 அக்டோபர், 2019

பக்தாதி பற்றி தகவல் கூறியவருக்கு 177 கோடி ரூபாய் பரிசு .. அடுத்த தலைவரும் உயிரிழப்பு?

தினமலர் : நியூயார்க்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடம் குறித்து, அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கொடுத்த உளவாளிக்கு, 177 கோடி ரூபாய் பரிசு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, அமெரிக்க ராணுவம், சமீபத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தப்பிக்க முடியாத பாக்தாதி, உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்தார். அவரது உடலை, அமெரிக்க ராணுவம் கடலில் துாக்கி வீசியது.
இந்நிலையில், பாக்தாதியை, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது குறித்து, அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:அல் பாக்தாதியின் இருப்பிடம், அவர் தங்கியிருந்த அறை, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அதை எப்படி முறியடிப்பது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், ஒரு முக்கிய நபர் தான் தெரிவித்துள்ளார்.

அவர், ஐ.எஸ்., அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். பாக்தாதி மற்றும் அவரது குடும்பத்தினரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் செயல்பட்டு வந்தவர்.அவர் தான், அனைத்து தகவல்களையும் அமெரிக்க ராணுவத்துக்கு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான், அமெரிக்க ராணுவம், பாக்தாதியை வேட்டையாடியது. இதற்கு பரிசாக, அந்த உளவாளிக்கு, 177 கோடி ரூபாய் அளிக்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்ட்டுள்ளது.


அடுத்த தலைவரும் பலி?

அல் பாக்தாதி உயிரிழந்ததை அடுத்து, ஐ.எஸ்., அமைப்புக்கு, அடுத்து தலைமையேற்க போவது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள தகவலில், 'ஐ.எஸ்., அமைப்புக்கு அடுத்து தலைமை பொறுப்பு ஏற்கவிருந்த நபரும், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார்' என, தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் யார், எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் எதையும், டிரம்ப் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக