வியாழன், 10 அக்டோபர், 2019

ரூ1 கோடி இழப்பீடு கேட்டு சுபஶ்ரீ தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அதிகாரிகளிடமே இழப்பீடு ஹைகோர்ட் அதிரடி /tamil.oneindia.com - mathivanan-maran : சென்னை: அதிமுக பிரமுகர் ஜெயபால் வைத்த பேனர் விழுந்ததில் மகளை இழந்த தங்களது குடும்பத்துக்கு ரூ1 கோடி இழப்பீடு தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளம்பெண் சுபஶ்ரீயின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த ஜெயபால் இல்ல திருமணத்துக்கு சென்னை புறநகரில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஶ்ரீ மீது விழுந்தது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஶ்ரீ மீது தண்ணீர் லாரி மோதியது. இச்சம்பவ இடத்திலேயே சுபஶ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை கடுமையாக்க சுழற்றியது. உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்களை வைக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

அத்துடன் சுபஶ்ரீ வீட்டுக்கு சென்று அரசியல் கட்சித் தலைவரகள் ஆறுதல் தெரிவித்தும் வந்தனர். மேலும் பேனர்கள் வைப்பதை தடுக்காத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அவர்களிடம் இருந்து சுபஶ்ரீ குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே தமிழக அரசு திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடி. சீனா பிரதமர் ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் தமிழக அரசு தரப்பில் பேனர்கள் வைக்க அனுமதி கோரப்பட்டது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இருப்பினும் சில நிபந்தனைகளுடன் பேனர்களை வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் சுபஶ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சுபஶ்ரீயை இழந்து வாடும் தங்களது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக