ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்! மின்னம்பலம் :  தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவிவந்தது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சிப் பணிகள் சுணக்கத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் தமிழக தேர்தல் ஆணையம் இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டுக்கான டெண்டரை அறிவித்துள்ள தமிழக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்கவும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வரும் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்! என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில் மதுரையில் நேற்று (செப்டம்பர் 21) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என நிரூபித்துக் காட்டி வருகிறோம். தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், “இந்தி மொழிக்கு எதிராக திமுக அறிவித்தபடி போராட்டத்தை ஏன் நடத்தவில்லை என ஸ்டாலின் கூற வேண்டும். இந்தி மொழிக்கு எதிராக திமுக போராடினால் ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கு வரும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக