திங்கள், 9 செப்டம்பர், 2019

ப.சிதம்பரம் : அதிகாரிகள் ஏன் கைதாகவில்லை?


அதிகாரிகள் ஏன் கைதாகவில்லை: சிதம்பரம் கேள்வி! மின்னம்பலம் : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 13 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் செல்வதை தவிர்க்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் சிதம்பரத்தால் அதனை தடுக்க முடியவில்லை. வரும் 19ஆம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்திற்கு வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளிட்ட சில வசதிகள் மட்டுமே செய்துகொடுக்கப்பட்டுள்ளது. உணவாக சப்பாத்தி, பருப்பு மற்றும் காய்கறிக் கூட்டு ஆகியவை அவருக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிதம்பரத்தை, அவரது குடும்பத்தினர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது சில விஷயங்களைக் கூறி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சிதம்பரம் சார்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 9) இடப்பட்டுள்ள பதிவில், “எனது சார்பாக என்னுடைய குடும்பத்தினரை ட்விட் செய்யக் கேட்டுக்கொண்டேன். “ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தை பரிசீலித்து உங்களுக்கு பரிந்துரை செய்த ஒரு டஜன் அதிகாரிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. பிறகு ஏன் நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கடைசியாக கையொப்பம் இட்டீர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா உங்களைக் கைது செய்திருக்கிறார்கள்” என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “மக்களிடம் சொல்வதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. எந்த அதிகாரியும் எந்தத் தவறும் செய்யவில்லை. எந்த அதிகாரியும் கைது செய்யப்பட வேண்டும் என்று நானும் விரும்பவில்லை” என்றும் சிதம்பரம் கூறியுள்ளதாக அவரது குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக