திங்கள், 9 செப்டம்பர், 2019

அசோக் லேலேண்ட் உற்பத்தி நிறுத்தம்!

உற்பத்தி நிறுத்தம் : அசோக் லேலேண்ட்!மின்னம்பலம் : முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலேண்ட் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைத்து வருவதுடன் , உற்பத்தியையும் குறைத்து வருகிறது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அசோக் லேலேண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”செப்டம்பர் 6, 7, ஆகிய தேதிகளும் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளும் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்படுகிறது. நிதி நிலையைக் கருத்தில் கொண்டு கட்டாய விடுப்பு நாட்களை மேலும் அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 9) அசோக் லேலேண்ட் நிறுவனம், சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 16 நாட்கள் வேலையில்லா நாட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், ஓசூரில் உள்ள இரண்டு உற்பத்தி மையங்களில் 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், மும்பை பந்த்ரா, ராஜஸ்தான் அல்வாரில் தலா 10நாட்களும், உத்தராகண்ட் பந்த் நகரில் 18 நாட்கள் வேலையை நிறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை சரிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நிறுத்தம் தொடர்பான கடிதத்தை மும்பை பங்குச் சந்தைக்கு அசோக் லேலேண்ட் அனுப்பியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக