செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம்?

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம்!மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகளாக இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து, தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்குச் சீட்டு கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாக தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ள தமிழக தேர்தல் ஆணையம், ஒன்றியம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தவுள்ளது.
இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 24) கடிதம் எழுதியுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்குத் தேவைப்படுகிறது. எனவே மின்னணு இயந்திரங்களை உடனே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தேர்தல் ஆணையம் கேட்கும் மின்னணு எந்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தலைமைத் தேர்தல் ஆணையம் அதனை அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக