வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நாங்குநேரியைத் திருப்பிக் கேட்கும் திமுக? நெருக்கடியில் அழகிரி...

டிஜிட்டல் திண்ணை:  நாங்குநேரியைத் திருப்பிக் கேட்கும் திமுக?  நெருக்கடியில் அழகிரிமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைன் காட்டியது. லொக்கேஷன் சத்தியமூர்த்தி பவன் காட்டியது.
“நாங்குநேரி. விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தான் போட்டியிடும் விக்கிரவாண்டியில், திமுக தனது வேட்பாளராக புகழேந்தியை அறிவித்து விட்டது . அதிமுக விக்கிரவாண்டிக்கு முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரிக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் என இரு தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் நாங்குநேரி தொகுதிக்கான தனது வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் திமுக தலைவர் ஸ்டாலின், தங்களால் நாங்குநேரி தொகுதிக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியாது என்று சொல்லிவிட்டது குறித்து மின்னம்பலத்தில் தனி செய்தியாகவே வெளியாகியிருக்கிறது. இந்த அதிர்வின் தாக்கத்திலிருந்து காங்கிரஸ் இன்னும் விடுபடவில்லை.

வேட்பாளர் யார் என்று தன்னிடம் கேட்கும் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சில நாட்களாகவே காங்கிரஸ் தலைவர் அழகிரி மனம்திறந்து பேசிவருகிறார். அப்போது, ‘ உண்மையிலேயே உங்களைப் போல எனக்கும் இதுவரை யார் வேட்பாளர் என்று தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவர் தனது நெருக்கமான வட்டாரத்தில் பகிர்ந்துகொண்ட தகவல்கள்தான் காங்கிரஸ் சீனியர்கள் மத்தியில் இப்போது விவாதமாகியிருக்கிறது.
அழகிரி அவர்களிடம், ’இந்தத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒரு பார்வையாளராக கடந்து போய்விடலாம் என்றுதான் நான் நினைத்தேன். ஏனென்றால் இடைத்தேர்தல்கள் எப்படி நடக்கின்றன என்பது நமக்கு தெரியும். ஆனால் நாங்குநேரி இடைத்தேர்தல் என்பது நாம் உருவாக்கிய இடைத்தேர்தல். நமது தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் என்றும் அங்கே போட்டியிட வேண்டும் என்று நம் கட்சியிலேயே பலர் வெளிப்படையாகக் கூறினார்கள். ஆனால் போட்டியிட வேண்டாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் இதைச் சொன்னால் நான் திமுகவிடம் விலை போய் விட்டேன் என்று என் நண்பர்களே என்னைப்பற்றி குற்றம்சாட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அதனால்தான் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு ஒப்புக்கொண்டேன். தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பதில் தண்ணீரிலும் தடம் பார்த்து நடக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.
நம்மில் நிறைய பேர் தகுதிவாய்ந்த வேட்பாளர் இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவினர் பத்து வண்டிகளில் வரும்போது நாம் ஒத்த சைக்கிளில் செல்லக் கூடிய நிலைமையில் தான் நமது பொருளாதார நிலைமை இருக்கிறது. அந்த ஒத்த சைக்கிளையும் வலுவாக ஒட்டக்கூடியவர் யார் என்பதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.
வசந்தகுமார் இந்த நாங்குநேரி தொகுதியின் தேர்தல் செலவில் பாதியையாவது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். அவருக்கும் இது பற்றி எடுத்து சொல்லியுள்ளேன். பணம், சாதி இரண்டுதான் நாங்குநேரி தேர்தலை தீர்மானிக்கும் என்பதால் அதற்கேற்ப தான் வேட்பாளரையும் முடிவு செய்ய வேண்டும்’ என்றும் அழகிரி தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் மனம் விட்டுக் கூறியிருக்கிறார். அதன்படி பார்த்தால் ஊர்வசி அமிர்தராஜ், வசந்தகுமாரின் மைத்துனரான இளைஞர் காங்கிரஸ் காமராஜ், ரூபி மனோகரன் என்று பட்டியல் நீள்கிறது.
இதேநேரம் நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேடிக் கொண்டிருப்பது தெரிந்து லோக்கல் திமுகவினர் இன்னும் உஷ்ணம் ஆகிவிட்டார்கள். கிரகாம்பெல், தகவல் தொழில்நுட்ப அணி எட்வின் உள்ளிட்டோர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயார் என்று சொல்லி, திமுகவில் வாய்ப்பு கேட்ட நிலையில் காங்கிரஸுக்கு இதை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் வேட்பாளரை இப்போது தேட வேண்டிய அவசியம் என்ன? கௌரவம் பார்க்காமல் தொகுதியை திமுகவிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானே? என்பது தான் அவர்களின் கேள்வி. அவர்களை சமாளிப்பதற்காகத்தான் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக நாங்குநேரி தொகுதியில் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கள ஆய்வு செய்த துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமியை பொறுப்புக் குழு தலைவராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின்.
அப்படியே கடந்து போய்விடலாம் என்று நினைத்த அழகிரியை அமுக்கி நாங்குநேரியில் ஸ்டாலின் தள்ளிவிட்டுவிட்டாரா என்ற கேள்வியும் காங்கிரசுக்குள்ளேயே கேட்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் அழகிரி பாஷையிலேயே சொல்லப் போனால்.... பத்து வண்டிகளுக்கு எதிராக போராடும் அந்த ஒத்த சைக்கிளுக்கு திமுகவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக