வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ரயில்வே அமைச்சகம் நீக்கப்படுகிறதா? எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!

ரயில்வே அமைச்சகம் நீக்கப்படுகிறதா? எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!மின்னம்பலம் :
ரயில்வே துறை மறுசீரமைப்பு தொடர்பான விவேக் தேவ்ராய் குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015ஆம் ஆண்டு வழங்கியது. அதில், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை என்றும், ரயில்வேயை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விட வேண்டும் என்பது உள்பட பல பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில் ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 26) அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து சேவையை பொதுத்துறையில் இருந்து தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்துடன் விவேக்ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. இந்த மோசமான பரிந்துரைகளில் சிலவற்றை மத்திய அரசு நடைமுறையில் நிறைவேற்றி விட்டது.
இதனைத் தொடர்ந்து இரயில்வே அமைச்சகம் அவசியமில்லை - என்பதையும் செயல்படுத்தும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறையின் பயணிகள் ரயிலை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று, தற்போது தமிழ்நாடு உட்பட சில ரயில்வே மண்டலங்களில் பயணிகள் இரயில்களை ரத்து செய்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கண்டிக்கிறோம். அதனை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இரயில்களை தனியாரிடம் விடுவதன் மூலம் அவர்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளவும், லாபம் தரக்கூடிய வழித்தடத்தில் மட்டுமே இரயில்களை இயக்கி, பயணிகள் சேவையை சுருக்கி விடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கை விடுத்த முத்தரசன், “நாட்டு மக்கள் நலன் கருதி விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும். இரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக