சனி, 7 செப்டம்பர், 2019

திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. செய்தி வந்து விழுந்தது.
“கடந்த ஜூன் மாதம் அப்போதைய தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பேசிய பேச்சும், அவருக்கு பதில் அளித்து முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு பேசிய பேச்சும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இப்போது அதே சலசலப்பு இவ்விரு கட்சிகளின் தலைவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் எழுதிய வாழ்வும் பணிவும் நூல் வெளியிட்டு விழா திருப்பூரில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்ததுபோல, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றிப் பெற்று நாம் ஆட்சிக்கு வருவோம். இன்னும் 25 வருடத்திற்கு திமுக ஆட்சியை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அந்த நிலையில் நாம் ஆட்சி நடத்துவோம்’ என்று பேசியிருந்தார்.


அந்த 200 தொகுதிகள் என்பது திமுக கூட்டணியா, திமுக மட்டுமா என்பது அந்த அரங்கத்திலேயே பெரும் கேள்வியாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் மறுநாள் செப்டம்பர் 6 ஆம் தேதி நாங்குநேரியில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தனித்து நின்று வெற்றிபெற முடியாதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், ’காங்கிரஸ் பலமாக இருக்கும் தென்மாவட்டங்களில் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியுமா? அப்படியான சூழ்நிலையை அடைந்திருக்கிறோமா? என்பதைப் பற்றி விவாதிக்கவே இந்தக் கூட்டம் ’என்று பேசியிருந்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்துவரும் நிலையில், ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோர் இவ்வாறு பேசியது திமுக, காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறிய ஸ்டாலினுக்கு எதிர்வினையாற்றும் விதமாகவே கே.எஸ்.அழகிரி இவ்வாறு பேசியதாகவும் கூறுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஆனால், ஸ்டாலின், 200 தொகுதிகளில் நாம்தான் வெற்றிபெறுவோம் என்று கூறினார். அது தனித்தா அல்லது கூட்டணியுடனா என்பது குறித்து குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்துள்ள கே.எஸ்.அழகிரி, “கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அவ்வாறு கூறினேன். இது இடைத் தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமும் அல்ல. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி கட்சிகளுடன் அமர்ந்து பேசி நல்ல முடிவை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

ஆனாலும் திமுக, காங்கிரஸ் என இரு தரப்பிலுமே ஸ்டாலின், அழகிரி ஆகிய இரு தலைவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. திமுகவில் பல்வேறு மாசெக்களும், ‘காங்கிரசால நாம ஜெயிக்கல. நம்மாலதான் காங்கிரஸ் ஜெயிக்குது. அதனால வர்ற சட்டமன்றத் தேர்தல்ல கலைஞர் மாதிரி காங்கிரஸுக்கு அள்ளிக்கொடுக்காம திமுகவே அதிக இடங்கள்ல போட்டியிடணும்’ என்று ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஸ்டாலினுக்கு ஏற்கனவே ஜெயலலிதா பாணியில் நாமும் எல்லா இடங்களிலும் தனித்து நின்றால் என்ன என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் திருப்பூர் பேச்சு.
அதேநேரம் காங்கிரசில் இன்னொரு தகவலைச் சொல்கிறார்கள். ‘அழகிரி நிதானமாக பேசக் கூடியவர். வைகோவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் அண்மையில் மோதல் வெடித்தபோது கூட, ஸ்டாலின் அமைத்த அற்புதமான சிற்பம் போன்ற கூட்டணிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் பேசினார். அப்படிப்பட்ட அழகிரி நாங்குநேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி என்ற அளவுக்குப் பேசியிருக்கிறார் என்றால் மேலிட அனுமதி இல்லாமல் பேசியிருப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதே அழகிரி சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் நடந்த சமூக தள காங்கிரஸார் கூட்டத்தில்., தன்னைத் தலைவராக நீடிக்க விட்டால் காங்கிரஸுக்கு 100 எம்.எல்.ஏ.க்களை பெற்றுத் தரும் சூழலை உருவாக்குவதாக பேசியிருந்தார். அந்த வகையின் நீட்சிதான் நாங்குநேரி பேச்சும்.

தவிர, காங்கிரசை கூட்டணியில் இருந்து கழற்றிவிடவில்லையென்றால் பல அரசியல் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று பாஜகவில் இருந்து திமுகவுக்கு நிர்பந்தங்கள் அதிகரிப்பதாகவும் அதன் விளைவே ஸ்டாலின் திருப்பூரில் பேசிய 200 எம்.எல்.ஏ.க்கள் பேச்சு என்றும் காஙகிரஸ் சீனியர்கள் சிலர் கூறுகிறார்கள்
.
திமுகவிலோ, ’விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் திமுகவோட கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் எத்தனை கவுன்சிலர்களை வென்றெடுக்கிறது என்று பார்ப்போம்’ என்று பேச ஆரம்பித்துவிட்டனர். அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி இருக்குமா என்பது கேள்விக்குறிதான்,. அப்படி கூட்டணி இருந்தாலும் அது உள்ளபடியே பரஸ்பர புரிதலோடு இருக்குமா என்பதை அதைவிட கேள்விக்குறிதான்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக