சனி, 14 செப்டம்பர், 2019

பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது .. ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

தினமலர் : புதுடில்லி: 'வரும் காலங்களில் பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.
டில்லி என்.டி.எம்.சி., மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திரேஷ் குமார் பேசியதாவது: 1947ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லை. இனி வரும் காலங்களில் அது நடக்கும் என நம்புகிறேன். காந்தி ஜெயந்தியையும், ஹிந்தி திவாசையும், விரைவில் லாகூரில் கொண்டாடுவோம். பிரிவினைக்கு பின் 1971ம் ஆண்டு பாகிஸ்தான் மேலும் பிரிக்கப்பட்டது. 'பிரிவினைவாத இயக்கங்களால்' பாகிஸ்தான் விரைவில் நொறுங்கிவிடும். தற்போது 5-6 துண்டுகளாக பிரியும் விளிம்பில் அந்நாடு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து பஷ்டூனிஸ்தான், பலுசிஸ்தான், சிந்து பிரிந்து செல்ல விரும்புகிறது. பாக்., நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதை நிபுணர்களும் கணித்துள்ளனர்.

ஊழலை ஊக்குவித்த காங்.,: ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை போல்., காங்., கட்சியினர் இருக்க முடியாது. ஏனென்றால் அதற்கு அர்ப்பணிப்பும், தியாகமும் தேவை. காங்., சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தது. ஆனால் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவை பிரிக்கும் காரணியாக மாறியது. ஊழல் மற்றும் குற்றச் செயல்களை அக்கட்சி ஊக்குவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சஷ் சின் உள்ளிட்ட இந்திய பகுதிகளை பாகிஸ்தானிடமிருந்து மீட்போம் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட சில அமைச்சர்கள் பார்லி.,யில் தெரிவித்திருந்தனர். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, முசாபராபாத்தில் பாக்., பிரதமர் இம்ரான் கான் பேரணி நடத்திய நிலையில், இந்திரேஷின் இப்பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக