சனி, 7 செப்டம்பர், 2019

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்ட கனிமொழி.. பரபரப்பு


tamil.oneindia.com - VelmuruganP. : சென்னை: ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் திமுகவினர் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தோருக்கு சாதகமான இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மற்றும் ரயில்வே வாரியத்திற்கு எதிராக முழக்கங்களை திமுகவினர் எழுப்பினர். ரயில்வே போட்டி தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு, கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி எம்பி ஆர்ப்பாட்டத்தின்போது பேசினார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக