சனி, 7 செப்டம்பர், 2019

BBC: சந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்?’ - மயில்சாமி அண்ணாதுரை பதில்

சந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கேள்வி:விக்ரம் லேண்டருடனான தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டிருக்கும்? என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
பதில்: முழுமையான தகவல்களை ஆராய்ந்த பிறகுதான் என்ன நடந்திருக்கும் என்பதை முழுமையாகச் சொல்ல முடியும். முதல்கட்டமாக கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் வரும்போது விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் கிடைக்காமல் போகின்றன. அதற்கு முன்பே, அதன் பாதை விலகுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
முதலாவதாக, நிலவை நெருங்க நெருக்க லேண்டரின் வேகம் குறைக்கப்படும். 800 நியூட்டன் திறனுள்ள இயந்திரங்கள் இதற்காக இயக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், லேண்டர் செல்லும் திசைக்கு எதிராக இயங்கும். அப்படித்தான் வேகம் குறையும். ஒரு கட்டத்தில், அதன் பாதையில் ஒரு மாறுபாடு தெரிகிறது. இது இரண்டு காரணங்களால் நடந்திருக்கலாம்.

சென்ஸார்களில் ஏற்பட்டிருக்கும் பழுதின் காரணமாக நடந்திருக்கலாம். அல்லது மெதுவாக தரை இறக்குவதற்கான நான்கு எந்திரங்களில் ஏதாவது ஒன்று பழுதடைந்து, மற்றவை நன்றாக இயங்கினால் வேகம் குறைவதற்குப் பதிலாக அதன் திசை மாறிவிடும்.
>இந்தக் காரணங்களால் அதன் வேகம் அதிகரிக்கும். ஏற்கனவே அங்கு ஓரளவுக்கு ஈர்ப்புவிசை இருக்கும். ஆகவே அந்த லேண்டர் வேகமாகச் சென்று தரையிறங்கியிருக்கலாம். ஆனால் எல்லா டெலிமெட்ரி தகவல்களும் கிடைத்த பிறகு, அதனை ஆராய்ந்து பார்த்துத்தான் முழு விவரங்களைச் சொல்ல முடியும்.
கே: என்ன நடந்திருக்குமென்ற யூகங்களைத்தான் இப்போது சொல்ல முடிகிறது. இந்த நிலையில், அந்த லேண்டரிலிருந்து ஏதாவது வழியில் சமிக்ஞைகளைப் பெறும் வாய்ப்பிருக்கிறதா?
ப:அது எப்படி தரையிறங்கியது என்பதைவைத்துத்தான் அதைச் சொல்ல முடியும். வேறு திசையில் திரும்பியிருந்தால் சமிக்ஞை கிடைக்காது. ஆனால், இறங்கும்போது சமிக்ஞைகளை அனுப்புவதைப்போல தரையிறங்கியிருந்தால், என்ன நடக்கிறதென பார்க்க வேண்டும். 2008ல் அனுப்பப்பட்ட சந்திரயான் 1ஐப் பொறுத்தவரை இன்னும் நிலவைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஆனால், அதிலிருந்து செய்திப் பரிமாற்றம் இல்லை. அதேபோல, இந்த விக்ரம் லேண்டரும் நிலவில் இறங்கி, செய்திப் பரிமாற்றம் மட்டும் துண்டிக்கப்பட்டிருக்கலாமா என்ற கேள்வியும் இருக்கிறது. படங்களை ஆராய்ந்தால், அது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்.


கே: இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? இதுபோல மீண்டும் ஒரு லேண்டரை நிலவில் தரையிறக்கிவிட்டுத்தான் மேலே செல்ல முடியுமா?
ப:இப்போது உள்ள சூழலில் நாம் மீண்டும் ஒரு முறை லேண்டரை தரையிறக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த முறை இன்னும் சிக்கனமாகச் செய்ய முடியுமென நினைக்கிறேன். ஆர்பிட்டர் ஏற்கனவே சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆகவே லேண்டர் கருவியை மட்டும் தயாரித்து அனுப்பினால் போதுமானதாக இருக்கும். அதனால், காலதாமதமின்றி, சிக்கனமாக இதனை மீண்டும் செய்யம் வாய்ப்பு இப்போது இருக்கிறது. 968 கோடி ரூபாயை மீண்டும் செலவுசெய்யத் தேவையில்லாமல், சில நூறு கோடி ரூபாய்களில் இதைச் செய்ய முடியும்.
சந்திரயான் திட்டங்களைப் பொறுத்தவரை ஒன்று நடக்கும்போதே, மற்றொன்று திட்டமிடப்படும். சந்திரயான் 1 திட்டத்தை வடிவமைக்கும்போது, அந்தத் திட்டம் ஒருவேளை தோல்வியடைந்தாலும் சந்திரயான் 2 செயல்பாட்டுக்கு வருவதைப்போலத்தான் திட்டமிடுவோம்.


அதேபோலத்தான் சந்திரயான் 2 திட்டம் முழுவதும் தோல்வி அல்ல. அதில் உள்ள ஆர்பிட்டர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இரண்டு - மூன்று ஆண்டுகள் அந்த ஆர்பிட்டர் இயங்கும். அதற்குள் லாண்டரைத் தயார் செய்து அனுப்பினால், இதில் சாதிக்க முடியும். அதற்கு மேல், சந்திரயானின் அடுத்த கட்டத் திட்டங்களைத் தொடரலாம்.
கே: விண்வெளித் திட்டங்கள் பெரும் செலவுபிடிக்கக்கூடியவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இம்மாதிரி திட்டங்கள் தேவையா என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பது, இந்தக் கேள்விகளை வலுப்படுத்தாதா?
ப: இது ஒரு பின்னடைவுதான். இருந்தாலும்கூட இதை பாடமாக வைத்துக்கொண்டு நம்மால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். இம்மாதிரி சவாலான திட்டங்களில் சறுக்கல்கள் தவிர்க்க முடியாதவை. உதாரணமாக, எஸ்எல்வி - 3 கூட முதலில் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால், அதிலிருந்து மேலே சென்றோம். எஸ்எல்வியிலிருந்து ஏஎஸ்எல்வி, அதற்குப் பிறகு பிஎஸ்எல்வி, அதிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 1, 2, 3 என முன்னேறியிருக்கிறோம்.
எனவே ஆங்காங்கு சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தத் திட்டம் மிகச் சிக்கனமானது.


இது ஒரு சறுக்கல்தான். ஆனால், இதில் கிடைத்த பாடங்களை வைத்துக்கொண்டு நாம் மேலே செல்ல முடியும். பிரதமரும் இதைத்தான் சொல்கிறார். தேசமே பின்னால் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இஸ்ரோவின் பிற திட்டங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. ஆனால், நிலவு தொடர்பான திட்டங்களில் இதைப் பூர்த்திசெய்த பிறகுதான் முன்னேற முடியும். அதைக் கூடிய சீக்கிரம் செய்ய முடியுமென நினைக்கிறேன்.
கே: சந்திரயான் - 2 திட்டத்தில் கடைசி கட்டத்தில்தான் பின்னடைவு ஏற்பட்டது. அதுவரை கிடைத்த முன்னேற்றம், அதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவை எந்த அளவுக்கு பயனுள்ளவை?
ப:நம்மால் கடைசிவரை செல்ல முடிந்திருக்கிறது. நிலவுக்கு 2 கி.மீ.வரை எல்லாம் ஒழுங்காகச் சென்றிருக்கிறது. அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை டெலிமெட்ரி வைத்து கண்டுபிடிக்க முடியுமென நினைக்கிறேன். அதுவொரு சிறிய பிழையாக இருக்கலாம். அதைச் சரிசெய்தால் திட்டத்தில் முன்னோக்கி நகர முடியும்.
நம்மிடம் கிடைக்கும் டெலிமெட்ரி தகவல்களை வைத்து ஓரிரு வாரங்களில் தவறு எங்கே நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இஸ்ரோவில் உள்ள ஃபெய்லியர் அனாலிசிஸ் கமிட்டி இதனை ஆராயும். அதற்குப் பிறகு புதிய திட்டத்தில் அந்தக் குறை சரிசெய்யப்படும்.


இதற்கு முன்பும் இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்டுள்ளன. சந்திரயான் 1 திட்டத்தில் செய்தித் தொடர்பு ஒரு கட்டத்தில் துண்டிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சந்திரயான் 1 நிலவைச் சுற்றிவருகிறது. சந்திரயானிலிருந்து செய்தித் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே, அப்படி நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது.
அதனால், அது செயலிழப்பதற்கு முன்பாக எவ்வளவு தகவல்களை எடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு தகவல்களை அதிலிருந்து பெற்றோம். இந்தக் குறைபாட்டை மீறித்தான் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
அதிலிருந்து கிடைத்த பாடம்தான் மங்கள்யான் சிறப்பாகச் செல்வதற்கான பாடத்தைத் தந்தது. ஆறு மாதம்தான் அதன் ஆயுள் எனத் திட்டமிட்டோம். இருந்தாலும் ஐந்து வருடங்கள் தாண்டியும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதேபோல இப்போதும் சந்திரயான் ஆர்பிட்டர் இன்னும் இயங்குகிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் இருந்து கற்ற பாடத்தை எடுத்துக்கொண்டு, முன் நகரும்போது நாம் இனி தயாரிக்கும் லேண்டர்கள் சிறப்பாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக