செவ்வாய், 17 செப்டம்பர், 2019

துரைமுருகன் கருத்தை நிராகரித்த ஸ்டாலின்

மின்னம்பலம் : துரைமுருகன் கருத்தை நிராகரித்த ஸ்டாலின்இந்தியாவில் பல மொழிகள் அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தாலும், இந்தி மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அன்றே அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில்,அது தேர்வாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
அதனை, ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா அவர்கள் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.
நாளை மறுநாள், (செப்டம்பர் 16) கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம்” என்று அறிவித்தார்.

அதுபோலவே திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 16) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கூடியது.
திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, மற்றும் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் இந்தித் திணிப்பு பற்றி அமித் ஷா தெரிவித்த கருத்து பற்றி விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த துரைமுருகன், “இந்தித் திணிப்பு பற்றி அமித் ஷா கூறியதை மக்களிடம் எடுத்துச் செல்ல முதலில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்துவோம். அதில் பாஜக அரசின் இந்தித் திணிப்பு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம். அதன் பின் ஆர்பாட்டம், போராட்டம் என்று இறங்கலாம். மக்களை இதற்குத் தயார் படுத்தாமல் போராட்டங்களில் இறங்கிப் பயனில்லை” என்றார்.
டி.ஆர்.பாலு பேசியபோது, “அமித் ஷாவை மற்ற அரசியல் தலைவர்கள் போல நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் சாதாரண ஆள் இல்லை. பல விஷயங்களை திசை திருப்புவதற்காக இதை சொல்லியிருக்கிறார். எனவே இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்” என்று கூறினார்.
இன்னும் சிலர் உடனடிப் போராட்டத்தில் விருப்பம் இல்லாத நிலையில் கருத்து தெரிவிக்க ஆனாலும் திமுக தலைவர் ஸ்டாலின், “வரும் 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் இந்தித் திணிப்பை எதிர்த்து ஆர்பாட்டம்” என்று அறிவித்துவிட்டார்.
ஸ்டாலினின் இந்த திடீர் அறிவிப்பு உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் இருந்த பலருக்கும் இஷ்டமில்லை. “பாஜக எப்போதும் இந்தி பற்றி இப்படித்தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறது. அது எல்லாவற்றுக்கும் இதுபோல திமுக ஆர்பாட்டம் செய்துகொண்டிருக்க முடியுமா? தலைவர் அவராக ஒரு முடிவெடுத்துக் கொண்டு இதுபோன்ற ஒரு கூட்டத்தை நடத்துகிறார். பின் அதை அறிவிப்பாக வெளியிடுகிறார். இந்தப் போராட்டத்தைக் கூட மாவட்டத் தலைநகரங்களில் என்று அறிவிக்காமல் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் என்று அறிவித்திருக்கிறார்.
திமுகவில் அமைப்பு ரீதியாக இரண்டு, மூன்றாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலெக்டர் அலுவலகம் இருக்கும் இடத்தில் மட்டுமே இந்த ஆர்பாட்டங்கள் நடக்கும். அப்போது அந்த மாவட்டச் செயலாளர் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறார். இதனால் மாசெக்களுக்குள் தேவையில்லாத ஈகோ பிரச்சினைகளையும் இந்த ஆர்பாட்டம் ஏற்படுத்திவிடும். கலெக்டர் அலுவலகம் இருக்கும் இடங்களில் மட்டுமே ஆர்பாட்டம் நடத்தினால், கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மற்ற இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெறாது. எல்லாரும் கலெக்டர் அலுவலகம் இருக்கும் மாவட்டத் தலைநகரங்கள் நோக்கி வரவேண்டும். வீண் செலவும், அலைச்சலும்தான் மிச்சம். ஆனால் தலைவர் ஏன் இப்படி முடிவெடுக்கிறார் என்றே தெரியவில்லை. மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டங்களில் இளைஞரணியினரோடு கலந்துகொள்கிறார் அவருக்கான ஒரு தளமாகவும் இந்த ஆர்பாட்டம் இருக்கலாம்” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக