செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அமித் ஷா : பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் தோல்வி.. பூனைக்குட்டி வெளியே வந்தது .. ஹிட்லர் வழியில் பாஜக .



மின்னம்பலம் : இந்தி மொழியைத் தொடர்ந்து பல கட்சி ஜனநாயக முறை குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி அலுவல் மொழியான தினத்தை முன்னிட்டு அதுகுறித்து கடந்த 14ஆம் தேதி கருத்து தெரிவித்து அமித் ஷா, இந்தியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என்று குறிப்பிட்டார். இதற்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமித் ஷாவுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த சர்ச்சையே அடங்காத நிலையில், பல கட்சி ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார் அமித் ஷா.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், “சுதந்திரமடைந்த பிறகான 70 வருடங்களில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோல்வியடைந்துவிட்டதா என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். பல கட்சி ஜனநாயக முறையால் நம்முடைய இலக்குகளை > அடைந்தோமா என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சும்” என்று தெரிவித்தார்.


உலகிலுள்ள
பல நாடுகளின் அரசியல் அமைப்புகளை ஆராய்ந்த பிறகுதான் பல கட்சி நாடாளுமன்ற
ஜனநாயக முறை இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும், நாடு
முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதும், மக்களுக்கு சம உரிமை மற்றும் வளர்ச்சி
கிடைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள
அமித் ஷா, “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் செய்திகள்
வெளிவந்துகொண்டிருந்தன, எல்லைகள் பாதுகாப்பற்றவையாக இருந்தன, ராணுவ
வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன, பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை
எனக் கருதினர், சாலைகளில் தினமும் போராட்டங்கள் நடைபெற்றது. காங்கிரஸ்
ஆட்சி அரசியல் ரீதியாக முடங்கியது” என சாடினார்.

மேலும், “சில
அரசாங்கங்கள் 30 வருடங்களாக ஆட்சியில் இருந்தபோதிலும் பெரிய முடிவுகள்
எதையும் எடுக்கவில்லை. ஆனால், பாஜக ஆட்சி செய்த இந்த 5 வருடங்களில்
ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு, துல்லிய தாக்குதல்கள் என 50 பெரிய முடிவுகளை
எடுத்துள்ளோம்” என்றும் அமித் ஷா பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

பல கட்சி ஜனநாயக ஆட்சி முறை தோல்வியில் முடிந்துள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகளும் எழத்துவங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக