வியாழன், 19 செப்டம்பர், 2019

இந்தி திணிப்பு ... பின்வாங்கிய அமித் ஷா ... இந்தியா முழுதும் பரவும் போராட்டம் ....

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு ஆளுநர் மூலம் அமித் ஷா சொன்ன செய்தி!
  மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொகேஷன் ராஜ்பவன் என்று காட்டியது.
“தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தது தமிழக அரசியலில் மட்டுமல்ல; இந்திய அரசியலிலேயே பல்வேறு விவாதங்களையும் யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தை ஒட்டி பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இதற்கு உடனடி எதிர்வினை தமிழகத்திலிருந்து கிளம்பியது.
இந்தப் போக்கை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், இது தொடர்பாக உடனடியாக செப்டம்பர் 16ஆம் தேதி திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

திமுக எதிர்ப்பை அடுத்து வேறுவழியில்லாமல் ஆளுங்கட்சியான அதிமுகவும் இதில் கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது .அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தங்கள் கொள்கை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்தின் மற்ற கட்சிகளும் அமித் ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவிக்க, தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் அமித் ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. அமித் ஷாவே எதிர்பார்க்காத வகையில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இந்திக்கு எதிராக கன்னடத்தைத் தூக்கிப் பிடித்தார்.
இந்த நிலையில்தான் நேற்று தான் கூறிய கருத்துக்கு விளக்கமளித்தார் அமித் ஷா. பாஜகவினரால் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் அமித் ஷா, தமிழ்நாடு தொடங்கிவைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் பரவுவதைக் கண்டு தன்னுடைய நிலைப்பாட்டை சற்று தளர்த்திக்கொண்டு விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
‘நான் இந்தியைத் திணிக்க சொல்லவில்லை. அவரவர் தாய்மொழியை அடுத்து இரண்டாவதாக இந்தி மொழியைக் கற்கலாம் என்று தான் கூறினேன். நான்கூட இந்தி மொழி அல்லாத குஜராத்தைத் தாய்மொழியாகக் கொண்டவன்தான்’ என்று விளக்கம் அளித்தார் அமித் ஷா. அவரது விளக்கத்தின் இறுதி வாக்கியம் முக்கியமானது. இதன் பிறகும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய சிலர் நினைப்பார்கள் என்றால் அது அவர்களின் விருப்பம் என்ற ஓர் எச்சரிக்கை தொனியிலான செய்தியையும் இந்த விளக்கத்தின் முடிவில் கொடுத்திருந்தார் அமித்ஷா.
அரசியல் செய்பவர்கள் என்று அமித் ஷா குறிப்பிட்டது திமுகவினரை மட்டும்தான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அதன் அடுத்தடுத்த நகர்வுகள் நேற்றே வெளிப்படத் தொடங்கின. நேற்று நண்பகல் திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுநர் மாளிகையிலிருந்து தொடர்புகொண்ட அதிகாரிகள் மாலை தங்களைச் சந்திக்க ஆளுநர் விருப்பப்படுகிறார் வர முடியுமா என்று கேட்டனர்.
ஏற்கனவே தமிழக அரசின் மீதும் தமிழக அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்களை திமுக சார்பில் ஆளுநரிடம் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆளுநரின் அழைப்பு பற்றி பல்வேறு விதமான வியூகங்கள் நிலவத் தொடங்கிய நிலையில் திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவை அழைத்துக்கொண்டு நேற்று மாலை ஐந்து மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் ஸ்டாலின். அவர் அங்கே செல்லும் தகவல் கிடைத்து துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி போன்றோர் ஆளுநர் மாளிகையை நோக்கி விரைந்தனர்.
கொஞ்ச நேரத்தில் ஸ்டாலினை மட்டும் உள்ளே அழைத்தார் ஆளுநர் பன்வாரிலால். அவருடன் சில அதிகாரிகள் இருக்க சுமார் 10 நிமிடங்கள் ஸ்டாலினுடன் சில கருத்துகளைப் பேசினார் ரோகித்.
’திமுக என்பது தமிழகத்தில் இன்று இருக்கக் கூடிய மாநிலக் கட்சிகளில் மிக மூத்த கட்சி. நீங்கள் அரசியல் செய்யுங்கள். பாஜகவை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய வேண்டாம் என்பது மத்திய அரசின் எண்ணம்’ என்று ஆளுநர் ஸ்டாலினிடம் கூறியதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
ஆளுநர் சந்திப்பு முடிந்ததும் விறுவிறுவென வெளியே வந்த ஸ்டாலின் டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோருடன் எதுவும் பேசவில்லை. தனது உதவியாளர் தினேஷிடமிருந்து செல்போனை வாங்கி கலைஞரின் செயலாளராக இருந்தவர்களில் ஒருவரான ராஜமாணிக்கத்திடம் பேசினார். முரசொலியில் சில விஷயங்கள் வர வேண்டும் என்பது பற்றி அந்தப் பேச்சு இருந்ததாகச் சொல்கிறார்கள் ஸ்டாலினை சுற்றி இருந்தவர்கள். உடனடியாக தினேஷின் செல்போனுக்கு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு என்ற அறிவிப்பு வாட்ஸ்அப்பில் வந்தது.
அதன்பின் ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின் இந்தித் திணிப்பு விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்று, ஆளுநர் அளித்த உறுதிமொழியை ஏற்று திமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார். இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டார் என்று சில ஊடகங்களில் தகவல் வெளிவர அதை திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மறுத்தனர். ஆளுநர்தான் ஸ்டாலினை அழைத்தார் என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். அப்படி என்றால் ஆளுநர் எதற்காக ஸ்டாலின் அழைத்தார் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அமித் ஷாவின் விளக்கத்தை திமுக தலைவரிடம் தெரிவிப்பதற்காக ஆளுநர் அழைத்ததாக திமுக தலைவரே சொல்கிறார். அப்படியெனில் திமுகவின் போராட்டம் அமித் ஷாவை அசைத்துப் பார்த்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் பாஜகவினரோ, திமுகவைதான் அமித் ஷா அசைத்துப் பார்த்திருக்கிறார் என்கிறார்கள். திமுகவை அழைத்து ஆளுநர் கடுமையாக எச்சரித்ததன் பின்னால்தான் போராட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார் ஸ்டாலின் என்றும் பாஜக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
‘உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தானாகவே அறிவித்த இந்த முடிவை ஸ்டாலின் ஆளுநரின் சந்திப்புக்குப் பின் மீண்டும் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் தானாகவே திரும்பப் பெறுகிறார் ஸ்டாலின். இது ஆச்சரியமாக இருக்கிறது. அமித் ஷாவின் விளக்கத்தின் மூலம் மொழிக் கொள்கையில் மத்திய அரசு மாறிவிட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஆளுநரும் ஸ்டாலினும் என்ன பேசினார்கள்? அமித் ஷா ஆளுநர் மூலம் ஸ்டாலினுக்குச் சொன்ன செய்தி மிரட்டலா, எச்சரிக்கையா, வேண்டுகோளா? ஒன்றுமே புரியவில்லை’ என்கிறார்கள் திமுகவின் சீனியர் நிர்வாகிகள்” என்ற தகவலுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக