ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

காங்கிரஸ்-வைகோ சமரசம் ...

சமரசமான காங்கிரஸ்-வைகோமின்னம்பலம் : நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (செப்டம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில், “விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக முழு அளவில் களத்தில் பணியாற்றும்.தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பாஜக அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக புதுவை மாநில நிர்வாகிகள், கழகக் கண்மணிகள் களப்பணி ஆற்ற வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜகவுடன் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வைகோவை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், திமுக கூட்டணிக்குள் சலசலப்பு உண்டானது.
அடுத்த சில நாட்களில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “வைகோவுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதற்கு நாங்கள் பதில் சொல்லிவிட்டோம். அதோடு அந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார். இதனால் மதிமுக-காங்கிரஸ் இடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக அப்போது கருத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முழு ஆதரவையும் அளிப்போம் என வைகோ தெரிவித்துள்ளதன் மூலம் காங்கிரஸ்-மதிமுக இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவே கூறுகிறார்கள் மதர்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக