ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்குக் கொடுமை வீடியோ . கனடா ex சிஷ்யை குற்றச்சாட்டு


.hindutamil.in : நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அற்புத ஆற்றல்களை
வெளிப்படுத்தும்படி சிறுவர், சிறுமிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக அவரது முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி லாண்ட்ரி கூறியுள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் சாரா ஸ்டீபனி லாண்ட்ரி. இவர் நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்தார். பிறகு ஆசிரமத்திலிருந்து விலகி தன் சொந்த நாடான கனடாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சாரா யூடியூபில் வெளியிட்ட வீடியோவில் நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு கொடுமைகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறுகையில், ''பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சில காலம் இருந்தேன். திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது குறித்து சில நாட்கள் நான் கற்றுக்கொடுத்தேன். அங்கு சிறுவர்களும் சிறுமிகளும் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர். ஒருநாள் அதிகாலையில் அழுதுகொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவர்கள் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி அடித்துத் துன்புறுத்தப்படுவதாகக் கூறினர்.
அடித்துத் துன்புறுத்தப்படுவது குறித்து வெளியில் சொல்வது குரு துரோகம் என்று ஆசிரம சிறுவர், சிறுமிகள் மிரட்டப்படுகின்றனர். இது குறித்து நித்யானந்தாவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ( நடிகை ) ரஞ்சிதாவிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார்'' என்றார்.
சாராவின் குற்றச்சாட்டை நித்யானந்தா ஆசிரமம் மறுத்துள்ளது. நித்யானந்தாவின் நற்பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையிலும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் சாரா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்று ஆசிரமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக