புதன், 4 செப்டம்பர், 2019

தமிழக பா.ஜ தலைவர் நியமனம் இப்போதில்லை!

தினமலர் : புதுடில்லி : தமிழக பா.ஜ.வுக்கு புதிய தலைவரை நியமிக்கும்
விவகாரத்தில் நிதானமாக முடிவெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் யோசனைகளும் பரிந்துரைகளும் வருவதால் புதிய தலைவர் யார் என்பதை நான்கு மாதங்களுக்கு பின் அறிவிக்கலாம் என பா.ஜ. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக பா.ஜ. தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தமிழகத்தில் உள்ள பா.ஜ. நிர்வாகிகளால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. 'ஏன் நடந்தது... எதற்காக நடந்தது' என பலரும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர். தமிழிசைக்கு பதிலாக தமிழக பா.ஜ.வின் புதிய தலைவராக கட்சி மேலிடம் யாரை நியமிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் அரசியல் களத்தில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள மூத்த பா.ஜ. தலைவர்கள் பலரும் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவு வேறு மாதிரியாக உள்ளது. இது குறித்து டில்லி பா.ஜ. வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியின் மாநில தலைவரை நியமிக்கும் விஷயத்தில் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தை கருத முடியாது.

இதற்கென தனியாக செயல் திட்டங்களுடன் கூடிய வியூகங்களை வகுக்க மேலிடம் முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய கட்சி என்பதால் இங்கும் கோஷ்டி பூசல்கள் இருப்பது தலைமைக்கு தெரியும். பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று மூத்த தலைவர்களுமே பதவியை பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

ஆனால் இவர்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு; அது அவர்களுக்கும் தெரியும். இதனால் தான் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் ஆதரவாளர் யாருக்காவது பதவியை வாங்க முடியுமா என முயற்சிக்கின்றனர். கட்சியில் உள்ள மற்றொரு பெண் தலைவரான வானதி சீனிவாசனும் போட்டிக்களத்தில் உள்ளார் என்றாலும் மீண்டும் பெண்ணையே தலைவராக்குவதிலும் கொங்கு மண்டல அரசியலும் இவருக்கு எதிராக உள்ளன. அப்படியானால் யாருக்குத் தான் பதவி கிடைக்கும் என்ற கேள்விக்கு இந்த முறை தமிழக பா.ஜ.வுக்கு மாறுபட்ட சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

கட்சி தலைவராக புதுமுகத்தை களம் இறக்கும் யோசனையும் உள்ளது. இருபெரும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் புதுமுகத்தால் அரசியல் நடத்த முடியுமா என்ற தயக்கமும் தென்படுகிறது. இதற்காக கட்சி சாராத பல துறைகளைச் சேர்ந்த பா.ஜ. வின் முக்கிய அனுதாபிகளின் கருத்துக்களை கேட்டு அறிவதில் டில்லி தலைமை அக்கறை காட்டுகிறது. இவர்கள் தான் புதிய தலைவரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களது பரிந்துரைகள் அனைத்துமே 'புதுமுகமே சரி' என்ற ரீதியிலேயே அமைந்துள்ளதை தலைமை கவனத்தில் வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பமாக கே.டி.ராகவனில் துவங்கி ஊடக பிரிவின் சுப்ரமணிய பிரசாத் வரையிலான தமிழக பா.ஜ.வின் இளம் முகங்கள் பலரது பெயர்கள் டில்லியின் பரிசீலனையில் உள்ளன.

இருப்பினும் 2021 சட்டசபை தேர்தல் ரஜினியின் புதிய கட்சி அ.தி.மு.க.வுடன் சுமுகமான உறவு இந்த மூன்றையும் உள்ளடக்கியே புதிய தேர்வு இருக்கப்போகிறது. இதற்கு வசதியான நபராக இருக்க வேண்டுமெனில் வலுவான கள அரசியல் செய்பவராக இருப்பதே பொருத்தமானது. தற்போதுள்ளவர்களில் பெரும்பாலானோர் 'ஊடகங்களில் செய்தி தொடர்பாளர்களாக இருப்பதற்கே தகுதியுடைவர்கள்' என டில்லி மேலிடம் கருதுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் நயினார் நாகேந்திரன் போன்ற ஓரிருவரையும் கவனமாக குறித்து வைத்துள்ளதால் கடைசி நேரத்தில் இவர்கள்கூட போட்டியில் முந்தலாம்.

'ராஜ்யசபா எம்.பி.யாக்கி அமைச்சராக்கப்படுவோம்' என்றே தமிழிசை நம்பினார். ஆனால் நடந்ததை அவரே திர்பார்க்கவில்லை. புதிய தலைவர் நியமனமும் இப்படித் தான் தடாலடியாக இருக்கப் போகிறது. கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல்கள் டிசம்பர் வரை நீடிக்கும். அதன்பின்பே புதிய தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரையில் பல்வேறு பரிந்துரைகளும் யோசனைகளும் டில்லி தலைமைக்கு தொடர்ந்து வரும். எனவே தமிழக பா.ஜ.வுக்கு புதிய தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் இன்னும் நான்கு மாதங்களுக்கு இழுபறி நீடிக்கவே செய்யும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக