வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மந்திரத்துக்கு மரியாதை... பாஜக தலைவர்களின் கணக்கு வழக்கில்லாத முட்டாள் கருத்துக்கள்

savukkuonline.com : மோடி
உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள், அறிவியலுக்கு புறம்பாக, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது ஒன்றும் புதிதல்ல.  இந்த முட்டாள்த்தனமான உளறல்களுக்கு அடிப்படை அமைத்துக் கொடுத்ததே மோடிதான்.
அக்டோபர் 2014ல், பிரதமராக ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, “மகாபாரதத்தில் கர்ணன் அவர் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை.  மகாபாரத காலத்திலேயே, ஜெனடிக் அறிவியல் வளர்ந்திருந்தது.  அந்த அடிப்படையில்தான் கர்ணன், அவரின் தாயின் வயிற்றில் பிறக்காமல் வெளியில் பிறந்தார்.
நாம் அனைவரும், பிள்ளையாரை வணங்குகிறோம்.  அந்த காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும், அறுவை சிகிச்சை நிபுணர் இருந்ததால்தான், மனிதனின் உடலில் யானையின் தலையை வைக்க முடிந்தது” என்றார்.   மோடி இவ்வாறு பேசியது, மும்பையில் மருத்துவர்களின் இடையே என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபி எம்.பி பிரக்யா தாக்கூர், பசு மாட்டின் மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும் என்றார்.  ஜனவரி 2019ல், இந்திய அறிவியலாளர்கள் மாநாட்டில் பேசிய, ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஸ்வர ராவ், மரபணு ஆராய்ச்சி மற்றும், செயற்கை கருத்தரிப்பு மூலமாகத்தான், மகாபாரதத்தில் கவுரவர்கள் 100 பேர் ஒரே தாய்க்கு பிறந்தார்கள் என்றார். திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், மகாபாரத காலத்திலேயே இண்டெர்னெட் இருந்தது என்று கூறினார்.
இப்படி இவர்கள் உளறுவது புதிதல்ல என்றாலும், இத்தகைய முட்டாள்த்தனங்களுக்கு, அங்கீகாரம் அளித்து, மக்கள் வரிப் பணத்தில் இது குறித்து ஆராய்ச்சி செய்வது, இப்போது தொடங்கியிருக்கிறது.

கேரவன் மாத இதழ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரிக் வேதத்தில் உள்ள, மகாமிருத்துஞ்சை மந்திரத்தை சொல்லி,  அதன் மூலம் அவர்களை உயிர் பிழைக்க வைக்க, ஆராய்ச்சியில் ஈடுபட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நிதி உதவி செய்துள்ளது.
2014ம் ஆண்டில், அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றிய, அஷோக் குமார் என்ற, நரம்பியல் நிபுணர், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட அரசிடம் நிதி உதவி கோரினார்.   தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, கோமா நிலையில் உள்ள நோயாளிகள் அருகே அமர்ந்து, மிருத்துஞ்சய் மந்திரத்தை ஓதினால், அந்த நோயாளிகள் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
அவரின் இந்த கருத்துரு, அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இது அறிவியலுக்கு எதிரானது என்று நிராகரிக்கப்பட்டது.  அடுத்ததாக, அஷோக் குமார்,  ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு இதே கருத்துருவை அனுப்புகிறார். அவரின் கருத்துரு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு மாதத்துக்கு 26 ஆயிரம் ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் மூளை தொடர்பாக, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தாலும், இன்னும் மருத்துவர்களால், மூளையின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.  தலையில் அடிபட்டு, ரத்தக் கசிவு ஏற்பட்டால், உடலில் எந்த பகுதி செயல்பாடுகளை இழக்கும் என்று சொல்ல முடியாது.   அப்படி செயல்பாடு இழந்தாலோ, அல்லது கோமா நிலைக்கு சென்றாலோ, அந்நோயாளிகளை காப்பாற்றுவது ஏறக்குறைய முடியாது என்றே சொல்லலாம்.   அதன் காரணமாகத்தான், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உலகெங்கும் வற்புறுத்தப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு நிதி உதவி கோரி, டாக்டர் அஷோக் சொன்ன காரணம்தான் விசித்திரமானது. “ராமாயணத்தில், இலங்கைக்கு பாலம் கட்டுவதற்கு முன், ராமர் மிருத்துஞ்சை மந்திரத்தை பயன்படுத்தினார்.  புராதன இந்தியாவில், போரில் காயமடைந்த வீரர்களை குணப்படுத்த மிருத்துஞ்சை மந்திரம் பயன்படுத்தப்பட்டது”.
இந்த ஆராய்ச்சித் திட்டம் தொடங்கியதும், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கு, இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று புரியவில்லை.  உடனே, அஷோக் குமார், டெல்லியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழமான லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீட பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்தார்.  அதிலிருந்து ஒரு பேராசிரியர் வந்து, வெறும் மந்திரம் சொன்னால் போதாது…  நோயாளியின் மீது கங்கை நீரை தெளித்து மந்திரம் சொன்னால், நோயாளிக்கு அதிக பலன் கொடுக்கும் என்று, சிகிச்சையை தொடங்கினார்.
கோமா நிலைக்கு சென்ற நோயாளிக்கு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மந்திரம் சொல்வதை தொடங்க வேண்டும்.   ஏழு நாட்கள் கால அவகாசத்தில் 1.25 லட்சம் முறை மந்திரம் சொன்னால், நோயாளி உயிர் பிழைப்பார் என்று சொல்லி, அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று, 2016  முதல் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இது வரை ஒரே ஒரு நோயாளி கூட கோமாவிலிருந்து பிழைத்து வந்ததாக தெரியவில்லை.
அறிவியலுக்கு புறம்பாக, பகுத்தறிவுக்கு எதிராக, நம்மை கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் பணிகளை பிஜேபி தொடர்ந்து செய்து வருகிறது.   இந்த போக்கு, பள்ளிப் பிள்ளைகளின் பாடத்திட்டங்களை மாற்றுவதிலிருந்து தொடங்குகிறது என்பதுதான் ஆபத்தான விஷயம்.
இந்த மூடநம்பிக்கைகளையும், பிற்போக்குத்தனங்களையும், அம்பலப்படுத்தும் கடமை, இடதுசாரிகளுக்கும் திராவிட கட்சிகளுக்கும் இருக்கிறது.
பகுத்தறிவு ஒளியை கையில் ஏந்தும் கடமையும் அவர்களுக்கு உண்டு.
தரவுகள் : கேரவன் மாத இதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக