புதன், 11 செப்டம்பர், 2019

சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் போதாதாம் .. களம் கண்ட சிங்கம் கார்த்தி சிதம்பரம் கவலை?

தமிழகத்தில் காங்கிரஸுக்கு பலம் இல்லை: கார்த்திமின்னம்பலம் : தமிழகத்தில் காங்கிரஸின் பலம் குறைவாக இருப்பதால் சிதம்பரம் கைதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர், பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
அதுபோலவே மற்றொரு காங்கிரஸ் தலைவரான கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அமலாக்கத் துறையால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சிவக்குமார் கைதுக்கு எதிராகக் கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தது. சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது தமிழகத்தில் நடந்த போராட்டங்களைவிட சிவக்குமார் கைதுக்கு எதிராகக் கர்நாடகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் திகார் சிறையில் சிதம்பரத்தைச் சந்திப்பதற்காக அவர் மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரத்திடம், சிதம்பரம் கைதுக்கு எதிராகத் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கர்நாடகத்தில் இருப்பது போல தமிழகத்தில் காங்கிரஸுக்கு பெரிய அளவில் பலம் இல்லை. அதன் காரணமாகவே பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை” என்று பதிலளித்தார்.
மேலும், “அனைத்து துறைகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 5 சதவிகிதம் அல்ல 3 சதவிகிதம்தான் பொருளாதார வளர்ச்சி உள்ளது” என்றும் மத்திய அரசை விமர்சித்தார் கார்த்தி சிதம்பரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக