திங்கள், 30 செப்டம்பர், 2019

நீதிபதி தஹில் ரமணி மீது பாயும் சிபிஐ ! அடுக்குமாடி குடியிருப்புக்கள் வாங்கியதில்...

சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மீது புகார்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவுமாலைமலர் : சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக தஹில் ரமானி இருந்து வந்தார். அவரை கடந்த 2-ந்தேதி நீதிபதிகளின் நியமன அமைப்பான கொலிஜியம் மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டை ஒப்பிடும் போது மேகாலயா கோர்ட்டு சிறியது. அதனால் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பாக கருதி கோர்ட்டுக்கு செல்ல மறுத்து விட்டார். இதனால் செப்டம்பர் 6-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன்பிறகு தஹில் ரமானிக்கு ஐகோர்ட்டு வக்கீல்கள் சார்பில் பிரிவுசார விழா நடத்தப்பட்டது. அப்போது தஹில் ரமானி குடும்பத்துடன் சென்னையில் வசிக்க போவதாக கூறினார்.

இந்த நிலையில் தஹில் ரமானி மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை இந்திய உளவு அமைப்பான ஐ.பி. கூறியுள்ளது. சென்னையில் செம்மஞ்சேரி மற்றும் திருவிடந்தை ஆகிய இடங்களில் தஹில் ரமானி 2 அடுக்குமாடி வீடுகளை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வாங்கி இருக்கிறார்.
இதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக ஐ.பி. குற்றம் சாட்டி இருக்கிறது. இதுபற்றி 5 பக்க அறிக்கையை ஐ.பி. உளவு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் வழங்கி இருக்கிறது.
இதையடுத்து நீதிபதி ரஞ்சன் கோகாய் இதுசம்பந்தமாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது.
தஹில் ரமானி வீடு வாங்கிய இரு இடங்களிலும் லோரியன் டவர் நிறுவனம் அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்பனைக்கு விற்றது. அதிலிருந்து இரு வீடுகளும் வாங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 18 லட்சம்.
இதில் ரூ.1 கோடியே 62 லட் சத்தை எச்.டி.எப்.சி. வங்கி கடன் மூலம் செலுத்தி உள்ளார். மீதி ரூ.1 கோடியே 56 லட்சம் தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கி உள்ளார்.
இந்த பணப்பரிமாற்றம் தனது குடும்பத்தினரின் 6 வங்கி கணக்குகள் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. 3 கணக்குகள் தனது கணவருடன் உள்ள கூட்டு வங்கி கணக்கு ஆகும். ஒரு கணக்கு மகனுடைய கூட்டு கணக்கு, மற்றொரு கணக்கு தாயாருடைய கூட்டு கணக்கு. மற்றொன்று தனது சம்பள வங்கி கணக்கு.
அந்த 6 வங்கி கணக்குகளில் இருந்து ரு.1 கோடியே 61 லட்சம் மும்பை மகிமில் உள்ள தனது வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ.18 லட்சம் தஹில் ரமானி மற்றும் அவரது தாயார் கூட்டு கணக்குக்கு வந்துள்ளது.
ஒரு மாதத்தில் அந்த பணம் மற்றொரு கூட்டு கணக்குக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த பணப்பரிமாற்றங்களில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக ஐ.பி. குற்றம் சாட்டி உள்ளது. தமிழகத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணை மன்றத்தை கலைத்த தன் பின்னணியில் முறைகேடு நடந்ததாகவும் அதன் அடிப்படையில் பணம் வந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் தொடர்பாக 2018-ம் ஆண்டு கோர்ட்டு சிறப்பு விசாரணை மன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி மகாதேவன் தலைமையிலான இந்த மன்றம் சிலை கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் விசாரணை தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பொன்.மாணிக்கவேலை முடுக்கி விட்டு பல சிலை கடத்தல்களை கண்டுபிடித்தது.
இந்த நேரத்தில் சிலை கடத்தல் சிறப்பு விசாரணை மன்றத்தை அப்போதைய தலைமை நீதிபதியான தஹில் ரமானி கலைத்து உத்தரவிட்டார். இதன் பின்னணியில் தான் தவறு நடந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இதுசம்பந்தமாக ஆங்கில பத்திரிகை ஒன்று தஹில் ரமானியிடம் கருத்து கேட்க முயன்றது. அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. ஆனால் எழுத்துப் பூர்வமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் எந்த ஒரு வி‌ஷயத்துக்கும் எனது கருத்துக்களை தெரிவிப்பதில்லை. அதை எப்போதும் நான் கடைபிடித்து வருகிறேன். எனது தனிப்பட்ட விவகாரங்களில் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக