ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ஸ்டாலின் பேட்டி : இந்தி திணிப்பை எதிர்ப்பது குறித்து தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நாளை முடிவு ம

தினத்தந்தி  : இந்தி திணிப்பை எதிர்ப்பது குறித்து, சென்னையில் நாளை (திங்கட் கிழமை) நடக்கும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு
செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி செயல்பட்டுக் கொண்டிருப்பது பற்றி?.

பதில்:- அது அவருடைய வேலை - கடமை. அந்த வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

கேள்வி:- ரெயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டிற்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:- பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இதுபோன்று 2-வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரெயில்வேயில், தபால் அலுவலகங்களில், அது தேர்வாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள். அதனை, ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதற்காக தி.மு.க. தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்கு பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது.


ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

நாளைய தினம் (இன்று) திருவண்ணாமலை மாவட்டத் தில், தி.மு.க.வின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள் (நாளை), தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்துபேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 16-9-2019 (நாளை) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.

அதில், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக