வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இனி, டாக்டருக்குப் பதில்... மெடிக்கல் ஏடிஎம்!

இனி, டாக்டருக்குப் பதில்... மெடிக்கல் ஏடிஎம்!மின்னம்பலம் : வங்கிகளில் சென்று காசோலையை நிரப்பி பணப்பரிவர்த்தனைகள் செய்ததை ஏடிஎம் இயந்திரங்கள் எளிமைப்படுத்தியதுபோல, இனி க்ளினிக்குகளுக்குச் சென்று டாக்டருக்காகக் காத்திருப்பதை மெடிக்கல் ஏடிஎம்கள் எளிமைப்படுத்தப் போகின்றன.
ஏடிஎம் எனும் மின்னணு இயந்திரம், பொதுமக்களுக்கு அவர்களது அருகாமையிலேயே பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதேபோல, காத்திருப்பு இல்லாத அதிவிரைவான மருத்துவ சோதனையை இனி ஏடிஎம் போன்ற இயந்திரத்தில் கிடைக்கும் வகையில் ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது ஸ்வயம் ஏஹெச்எம்.

சான்ஸ்கிரிடெக் ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மருத்துவத் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமொன்று இதை உருவாக்கியிருக்கிறது. ஏடிஎம் போல ஏஹெச்எம் என அழைக்கப்படும் இந்த சுகாதார கண்காணிப்பு இயந்திரம் இந்தியாவின் முதல் மேம்பட்ட சுகாதார இயந்திரமாகும். இதுகுறித்த அறிமுக விழா நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்றது. அப்போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான பிரீத்தம் குமாவத் கூறும்போது, “ஸ்வயம் ஏஹெச்எம் எளிமையான செயல்முறையுடனும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை அடிப்படை கணினி அறிவுள்ள எந்தவொரு நபரும் நிர்வகிக்கலாம்.”
தற்போது இந்த இயந்திரத்தால் ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவு, டெங்கு, ஹீமோகுளோபின், டைபாய்டு, ஹெச்ஐவி, மலேரியா, சிக்குன்குனியா, சிறுநீர் பரிசோதனைகள், ஈசிஜி, காது பரிசோதனை, தோல் பரிசோதனை உள்ளிட்ட 58 வகையான சோதனைகளை வழங்க முடியும்.
வழக்கமாக இந்த மருத்துவ சோதனைகளைப் பெற வேண்டுமென்றால் மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால், ஸ்வயம் ஏஹெச்எம் மூலம் நிமிடங்களில் அச்சு மற்றும் டிஜிட்டல் ரிப்போர்ட்களை பெற முடியும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்வயம் ஏஹெச்எம் இயந்திரம் இந்தூர், புவனேஷ்வர், குர்ஹான் ஆகிய நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இந்தியாவின் மற்ற நகரங்களில் இன்னும் சில மாதங்களில் தொடங்கவிருக்கிறது.
கார்ப்பரேட் வீடுகள், வணிக பூங்காக்கள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், க்ளினிக்குகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், குடியிருப்பு காலனிகள் ஆகிய இடங்களில் ஸ்வயம் ஏஹெச்எம் இயந்திரங்களை அமைக்கலாம் என இதன் நிறுவனர்களில் ஒருவரான பிரீத்தம் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக