வெள்ளி, 20 செப்டம்பர், 2019

காட்டுவாசிகளிடம் கற்றவை - 7. பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவம் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 7
மின்னம்பலம :மருத்துவ அத்தியாயம் -நரேஷ்
‘‘ஒரு பழங்குடிப் பெண் எங்கிட்ட சொன்னா, ‘நாங்க யானையோட நஞ்சை எடுத்து வெச்சிப்போம். ஒரு புள்ளைக்குப் பிரசவம் ஆகப் போவுதுன்னா விட்டத்துல கயிற்றைக்கட்டி, அவளை உட்காரும் நிலையில் முட்டிப்போட வெச்சிருவோம். முட்டிக்குக் கீழே யானை நஞ்சை வெச்சிடுவோம். அப்படி வெச்சா, வலியில்லாம புள்ள சுளுவா வெளியே வந்துரும்’ என்றார்.
இது எப்படின்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். அப்பதான் வனவிலங்கு மருத்துவர் ஒருத்தர் சொன்னாரு, `யானை நஞ்சுல ‘ஈஸ்ட்ரோஜென்’ என்கிற ஹார்மோன் இருக்குமாம். நவீன மருத்துவத்துல பிரசவத்தின்போது வலி ஏற்படாம இருக்க, மருத்துவமனைகள்ல இதை பயன்படுத்துறதா சொன்னாரு. அதைத்தான் அந்த மக்கள் தெரிஞ்சு வெச்சிருக்காங்க’ன்னாரு. இது எவ்ளோ பெரிய அறிவு. அந்த மக்கள் எந்த லேப்ல இதையெல்லாம் டெஸ்ட் பண்ணாங்க. இந்த பாரம்பரிய மருத்துவ அறிவை நாம பாதுகாக்க வேண்டாமா?” என்றொரு வியப்பான தகவலுடன் பேசினார் ஆதிவாசிகள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன்.


“பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவம் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.
நீரில் பிழைக்கத் தெரிய வேண்டும். நெருப்பில் உழைக்கத் தெரிய வேண்டும்’’ என்றார் ‘அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்’ என்ற தலைப்பில் பழங்குடிகள் குறித்த ஆகச் சிறந்த நூலை எழுதிய ம.செந்தமிழன்.

பழங்குடிகளிடம், மருத்துவம் குறித்த தெளிவான பார்வை இருக்கிறது. நவீன மருத்துவமனைகள் குறித்த அச்சம் இருக்கிறது. இயற்கையுடன் இணைந்த இந்த அழகான வாழ்க்கை முறையானது, அவர்களுக்கு நோயற்ற நெடிய வாழ்வை வழங்குகிறது.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ எனும் திருவள்ளுவ மந்திரத்தை அவர்கள் நிச்சயம் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்த மந்திரத்தின் அர்த்தத்தை அவர்களின் வாழ்க்கையினூடே அழகாகக் காண முடிகிறது.
நம் பொதுப்பார்வையில், சித்தர்களைப் போல `மூலிகை மருத்துவம்’ என்ற துறையைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பழங்குடிகள் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், அம்மக்களின் பொதுவான வாழ்க்கை முறையில் மருத்துவம் என்று தனியாக ஒரு துறை கிடையாது. உணவின் ஊடாகவும், ஐம்பூதங்களின் ஊடாகவும் மருந்துகளை உட்கொள்வதை அம்மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, சூரியஒளியில் உடல் நனையுமாறு உழைப்பதையும் ஆறு, ஊற்று மற்றும் மழை போன்ற இயற்கை நீராதாரங்களில் நீராடுவதையும்தான் அம்மக்கள் ஆகச்சிறந்த மருத்துவக் கொள்கைகளாகக் கடைப்பிடிக்கின்றனர்.

நிலம், நீர், ஆகாயம், காற்று, வெப்பம் ஆகிய ஐம்பூதங்களை உள்ளிழுத்து, அவற்றுடன் ஒன்றி வாழ்வதன் மூலம் நோயற்ற வாழ்வை வாழ்கின்றனர். இவையல்லாது இம்மக்கள் உணவாக உட்கொள்பவை யாவும் மருந்துகளே. எனவே, எலும்புமுறிவு போன்ற பெரிய தொல்லைகள் அன்றி சிறிய பிரச்சினைகளுக்கு அவர்கள் மருத்துவமனையை நோக்கிச் செல்வதில்லை.
“எண்ணெய் எல்லாம் ஊத்தி கிளீனா சாப்பிட்டா ஆஸ்பத்திரி போகோணும். நீங்கெல்லாம் ஆஸ்பத்திரி போவீங்க. ஆனா, நாங்க போக மாட்டோம். தளைதாம்பு (இலை தழைகள் என்ற பொருளில் விளங்குமாறு) திங்குறோம்ல, அதுலேயே உடம்பு சரியாகிடும்” என்றார் கம்பனூரைச் சேர்ந்த ஶ்ரீரங்கன்.
‘‘அப்படியென்ன தளைதாம்பு சாப்புடுறீங்க?” என்றோம்.
“மின்னத்தளை, மிச்சுடித்தளை, காரித்தளை, சீவத்தளை, மல்லிகத்தளைன்னு இதுங்களைத்தான் அதிகமா திண்போம். மழை நல்லா அடிச்சிட்டு போயிடுச்சுன்னா, மலையெல்லாம் தளைகளா ஏறிடும். பறிச்சு சாப்பிடுறதுதான் நம்ம வேலை. அப்புறம் நோவுக்கென்ன வேலை?” என்று நகைத்தார். அது, நவீனத்தை நோக்கிய எள்ளல் நகைப்பு என்பதை நேரில் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
“சும்மா தலை நோவுதுன்னா ஆயிரத்தைத் தூக்கிட்டு ஓடுறீங்க ஆஸ்பத்திருக்கு. அங்க போயி ஊசி போட்டுட்டு அவனுக்குக் காசை அழுதுட்டு வர்றீங்க. தலைநோவக்கூடப் பொறுத்துக்க முடியாதா? வெயிலு மழை காடுன்னு சுத்துனா வலி பொறுத்துக்க சத்து இருக்கும். ஒடம்ப சொகமாவே வெச்சிருந்தா, பொறந்ததுக்கு என்ன பிரயோஜனம்? ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க... எங்களுக்கு ஆஸ்பத்திரியும் இதேதான். நோவுக்கான மருந்தும் இதேதான்!” என்று மலையைக் கைகாட்டி தங்கள் வாழ்க்கை மந்திரத்தை முழங்கினார் லட்சுமி.
‘‘சரிங்க. உங்களுக்கு தலைவலி வந்தா என்ன செய்வீங்க?”
“தல நோவு வந்தா தண்ணிய குடுச்சிட்டுப் படுத்துட்டா காலையில சரியாகிடும். அப்பிடியும் சரியாகலைன்னா சீங்கத்தளை, கீரத்தளையை அரைச்சு திண்ணா ஒரு ராவுல சரியாகிடும். நீங்க அப்படி ஒருதாட்டம் சாப்பிட்டுப் பாருங்க. உங்களுக்கு நோயே வராது.”
“அப்போ இலைதளை சாப்பிட்டாதான் தெம்பா இருக்க முடியுமா? கறியெல்லாம் சாப்பிட மாட்டீங்களா?”
“கறி சாப்புடாம பாடுபடுறது எப்படி? புள்ளிமான் கறி, முயல் கறி, முள்ளம்பன்றி கறி, ஆட்டுக்கறின்னு எல்லாத்தையும் சாப்பிடுவோம். அதுல சத்து, இதுல சத்துன்னு பார்க்காம கிடைக்குறதைச் சாப்புட்டு, பாடுபட்டா நோயே வராது. அதான் நிம்மதியா இருக்கும். நாளெல்லாம் உட்கார்ந்த நிலையிலே நோகாம பாடுபட்டு, ஆஸ்பத்திரிக்கு காசை குடுத்து நிம்மதியில்லாம அலையறதுல என்ன பிரயோஜனம் இருக்கு, சொல்லு தம்பி. அதான், இங்க உட்டுபுட்டு அங்க வரமாட்டோம் என்கிறோம். வெளங்குதா?”
நன்றாக விளங்கியது. நோய் என்பது உடலால் வருவது மட்டுமல்ல, உள்ளத்தாலும் வருவது என்பதை அவர்கள் அனுபவத்தின் வழியாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அனுபவம் இப்போது அழிந்துவருகிறது. அதை ஆவணப்படுத்த வேண்டியது மனிதகுலத்தின் மீட்சிக்கான வழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக