வியாழன், 19 செப்டம்பர், 2019

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நாளை நடக்காது .ஸ்டாலின் அறிவிப்பு! ... அமித் ஷா அப்படி சொல்லவில்லை என்று ஆளுநர் ....

இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்புதமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்ததி.மு.க. போராட்டம் திடீர் வாபஸ்கவர்னரை சந்தித்து பேசியபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தினத்தந்தி : இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின்
கருத்துக்கு எதிர்ப்பு!
தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்ததி.மு.க. போராட்டம் திடீர் வாபஸ்கவர்னரை சந்தித்து பேசியபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தி மொழி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் தி.மு.க. நாளை நடத்த இருந்த போராட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. சென்னை, இந்தி தினத்தையொட்டி, பாரதீய ஜனதா தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா கடந்த 14-ந்தேதி ‘டுவிட்டர்’ பதிவு ஒன்றை வெளியிட்டார். அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்பு. அதில், சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்றும் கூறி இருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமித்ஷாவின் கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தைப் போல் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

விளக்கம்

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில் தனது கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கூறவில்லை என்றும், தனது பேச்சை நன்றாக கவனித்தால் அது தெரியும் என்றும், 2-வது மொழி ஒன்றை படிக்க விரும்பினால் இந்தி கற்கலாம் என்றுதான் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு திடீரென்று புறப்பட்டு சென்றார். அவருடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும் சென்றார். அங்கு மாலை 5.30 மணி அளவில் மு.க.ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு ½ மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கவர்னரை, மு.க.ஸ்டாலின் திடீரென்று சந்தித்து பேசியது ஏன்? என்று தெரியாததால், ஏராளமான பத்திரிகையாளர்கள் கவர்னர் மாளிகைக்கு வெளியே காத்து இருந்தனர்.

தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை

கவர்னருடனான சந்திப்பு முடிந்ததும், மு.க.ஸ்டாலின் காரில் ஏறி நேராக அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் உறுதி

இன்று (நேற்று) காலை கவர்னர் என்னை சந்திக்க விரும்புவதாக எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று நானும், டி.ஆர்.பாலுவும் கவர்னர் மாளிகைக்கு சென்றோம். இந்த சந்திப்பின்போது, 20-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடத்தப்பட இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி கவர்னர் பேசினார்.

என்ன காரணத்திற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை நாங்கள் கவர்னரிடம் விளக்கி சொன்னோம்.

அதைத்தொடர்ந்து அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் அழுத்தம் திருத்தமாக எங்களிடம் கூறினார்.

“இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா?” என்று நாங்கள் அவரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கிறேன். எனவே மத்திய அரசு சொல்லித்தான் இதை நான் உங்களிடம் சொல்கிறேன்” என்ற உறுதியை எங்களிடம் தந்தார்.

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா ஊடகங்களின் மூலமாக ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார். “இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது” என்று அவர் விளக்கம் தந்து இருக்கிறார்.

அவர் சொன்ன அந்த கருத்தை மனதில் கொண்டு, 20-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால், கருணாநிதி வழி நின்று என்றும் எதிர்ப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

தி.மு.க.வுக்கு வெற்றி

கேள்வி:-அமித்ஷா தன் கருத்தை வெளிப்படுத்தி 2 நாட்களுக்கு பிறகு, இப்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்? அவர் ஆழம் பார்ப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:-கவர்னர் எங்களை அழைத்ததன் பேரில் நாங்கள் சென்று அவரை பார்த்தோம். இந்த போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளதால், அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து அவர் அதற்காக விளக்கம் தந்து இருக்கலாம்.

கேள்வி:-தி.மு.க. போராட்டம் அறிவித்ததால், அந்த அச்சத்தின் காரணமாக மத்திய அரசு பின்வாங்கி விட்டது என்று நினைக்கிறீர்களா?

பதில்:-இதற்கு முன்பு ரெயில்வே தேர்வு, தபால் துறை தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டபோது நாங்கள் போராடினோம். இதைத்தொடர்ந்து அந்த தேர்வில் இருந்து இந்தி திணிப்பை வாபஸ் பெற்றார்கள். இப்போது நாங்கள் அறிவித்த போராட்டத்தின் காரணமாக அவர் கூறிய கருத்துக்கு விளக்கம் கூறப்பட்டு இருப்பது உள்ளபடியே தி.மு.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக