வெள்ளி, 6 செப்டம்பர், 2019

பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா .. அதிமுக- அமமுக- பாஜக இடையே ஒரு முக்கோணப் புரிந்துணர்வு?

மின்னம்பலம் : எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தை எதிர்த்தும், பாஜகவை எதிர்த்தும் ஒலித்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கடுமையான குரல், அண்மைக் காலமாக மென்மை அடைந்துள்ளது.
இதன் இன்னொரு பின்னணியாக சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த தகவலை, மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
சந்திரலேகாவை சந்தித்த சசிகலா அதுபற்றி விவாதிக்க தினகரனை நேற்று (செப்டம்பர் 5) சிறைக்கு அழைத்துள்ளார்.

தினகரன், அவரது மனைவி, மகள் ஆகியோருடன், தினகரனின் சகலை டாக்டர் கார்த்தி, சசிகலாவின் பி.ஏ. கார்த்தி, கார்டன் மேனேஜர் நடராஜன், விவேக், சகிலா, தேவாதி பட்டாச்சாரியார் என்று பலரும் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இவர்களில் தினகரன், அனுராதாவுடன் மட்டும் சசிகலா சுமார் ஒருமணி நேரம் உரையாடியிருக்கிறார். அப்போது கடந்த மாதம் சந்திரலேகா பாஜகவின் தூதுவராக தன்னை சந்தித்துப் பேசியது பற்றி தினகரனிடம் கூறிய சசிகலா, ‘அவங்கதான் வீணாக நம்மை பழிவாங்கினாங்க. நாம எந்த இடத்துலயும் இறங்கிப் போகல. இப்ப அவங்களே நம்மகிட்ட பேச வர்றாங்க. வாஜ்பாய் காலத்துல நாம பாஜகவோட கூட்டணி வச்சிருந்தப்ப சிற்சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அனுராதாதான், ராஜ்நாத் சிங்கோட பேசிச்சு. இப்ப அவங்க பேச தயார்னா நாமளும் பேசலாம். தேர்தல் நெருங்க நெருங்கதான் மோடி நம்மளைப் பத்தி நல்லா தெரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆக பாஜகவுடன் பேச தினகரனுக்கு உத்தரவிட்டிருக்கிறார் சசிகலா.
சசிகலாவின் இந்த உத்தரவுக்கான எதிரொலி இன்று (செப்டம்பர் 6) மதுரையில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது வெளிப்பட்ட அவரது தொனியில் தெரிந்தது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி மதுரையில் செய்தியாளர்கள் தினகரனிடம் கேட்டபோது, “இந்தத் திட்டம் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இப்போது திமுக இதை எதிர்ப்பதாக இரட்டை வேடம் போடுகிறது. இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே வழங்கப்படுகிற விலையில்லா பொருட்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதுதான் அமமுகவின் கோரிக்கை” என்று மென்மையாக பதிலளித்தார் தினகரன்.
முதல்வர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் பற்றிய கேள்விக்கு, “போயிட்டுதான் வரட்டுமே. முதலீடுகளை ஈர்க்கணும்னு எதிர்பார்க்கிறோம். ஈர்த்து வந்தால், வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் நல்லதுதான்” என்று ஆச்சரிய பதில் தந்தார் தினகரன்.
சசிகலாவின் விடுதலை பற்றி கேட்கப்பட்டபோது, “அவர்களை வெளியே எடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிலளித்தார் தினகரன்.
வாய்ப்பு கிடைத்தால் அதிமுகவையும், பாஜகவையும் ’வச்சி செய்து’ வந்த தினகரன், இப்போது மென்மையான பதில் தருவது அதிமுக- அமமுக- பாஜக இடையே ஒரு முக்கோணப் புரிந்துணர்வு முளைவிட்டு வருவதை காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக