வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சினிமா டிக்கெட்டுக்கள 100 வீதம் ஆன்லைன் விற்பனை? நடிகர்களின் பிளாக் டிக்கெட் வசூலுக்கு ஆப்பு?

மின்னம்பலம் : சினிமா டிக்கெட்டுகளை 100 சதவீதம் ஆன்லைன்
பெறுவதற்காக தமிழக அரசு மூலம் ஒரு சர்வர் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகள் 100 சதவீதம் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அது மேலும் மக்களுக்கு சுமையாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு விவாதித்தனர். இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பாரதிராஜா, அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புக் மை ஷோ, டிக்கெட் நியூ.காம், பேடிஎம் ஆகிய தளங்களில் ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிறது. இதற்கு இந்த நிறுவனங்கள் டிக்கெட் ஒன்றிற்கு 30 முதல் 40 ரூபாய் வசூலிக்கின்றன. ஒரு குடும்பத்தில் ஐந்து டிக்கெட்டுகள் புக்கிங் செய்ய 150லிருந்து 200 ரூபாய் வரை இதற்காக கூடுதலாக செலவிடப்படவேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் விசாரித்த போது, “இந்த நிறுவனங்கள் திரையரங்கு உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரு தொகையை அவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர். இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், திரையரங்கு நடத்தும் அதன் உரிமையாளர்களைவிட இந்த இணையதளங்களை நடத்தும் நிறுவனங்கள் பெரியளவில் லாபம் பார்க்கின்றன. இதைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசிடம் கோரிக்கைவைத்தோம். அதன்படி ஆன்லைனில் ஒருவர் ஒரு நேரத்தில் எத்தனை டிக்கெட் புக்கிங் செய்தாலும் 30 ரூபாய் என்றால், அது மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தனியாக வசூலிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினோம்” என்றனர்.
இதுதவிர ஒரு நாளுக்கு நான்கு காட்சிகள் என்பதைக் கடந்து படத்தின் கால அளவைக் கொண்டு ஐந்து, ஆறு காட்சிகள் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்பண்டங்கள், பார்கிங் கட்டணங்களையும் முறைப்படுத்த வேண்டும்; கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிறது. ஆனால் சிறு நகரங்களில் நேரடியாக திரையரங்கிற்கு சென்று டிக்கெட்டுகள் வாங்குபவர்களே அதிகம். மேலும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது அனைவருக்கும் எளிதானது அல்ல. இதனால் பாமரர்கள் திரையரங்கிற்கு செல்ல வேண்டும் என்றால் வேறு யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவர்கள் திரையரங்கிற்கு வருவது குறைந்துவிடாதா என்ற கேள்வியும் இருந்தது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இது குறித்த விளக்கத்தை அளித்தார். தமிழக அரசு மூலம் ஒரு சர்வர் அமைக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள 977 திரையரங்குகளும் இணைக்கப்படும். அதேநேரத்தில் திரையரங்கிற்கு நேரடியாக சென்று டிக்கெட் எடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். திரையரங்கு ஊழியர்கள் மூலம் வழங்கப்படும் அந்த டிக்கெட்டையும் சர்வரின் மூலம் இணைக்கப்பட்டே பெறமுடியும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் ஆலோசனைகளை, கோரிக்கைகளை முன்வைத்தனர். அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் இணைத்து ஆலோசனை நடத்தப்படும்” என்று கூறினார்.
இயக்குநர் பாரதி ராஜா பேசும் போது, “அரசு எடுத்துள்ள இந்த புதிய முயற்சியை வரவேற்கிறேன், இதன் மூலம் ஒளிவு மறைவின்றி டிக்கெட் விற்பனை குறித்து தெரிந்துக்கொள்ள வழிவகுக்கும்” எனக் கூறினார்.
100 சதவீதம் ஆன்லைன் புக்கிங் கொண்டுவரப்படுவது எந்தவகையில் ஆரோக்கியமானதாக இருக்கும் என திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். “இதன்மூலம் அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். அரசு நிர்ணயித்த விலை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்று எளிதாக கணக்கிடமுடியும். மேலும் சில தயாரிப்பு நிறுவனங்கள் படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியது என இரண்டு நாள்களிலேயே விளம்பரம் செய்கின்றன. இதனால் நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த பட்ஜெட்டும் உயர்கிறது. இந்த முறை அமலுக்கு வந்தால் எந்த திரையரங்கில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன என்று எளிதில் பார்க்க முடியும்” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக