ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ஒரு திமுக தொண்டனின் குமுறல்... திமுக தலைமையின் செவியில் விழுமா?

Chozha Rajan : உலகத்தில் எந்த இயக்கத்தில் பணிபுரிபவர்களுக்கும், எந்த ஒரு
அமைப்பில் பணி புரிபவர்களுக்கும், எந்த ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கும் இல்லாத பணிச்சுமை திமுக மாவட்ட செயலாளர்களுக்கு உண்டு.
எந்த பணிச்சுமையானாலும் அதை துச்சமென மதித்து கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பாடுபட்டுக்கொண்டிருக்கும் அத்துணை திமுக மாவட்ட செயலாளர்களை வணங்கியே இந்த பதிவு.
திமுக மா.செக்கள் எனக்குத் தெரிந்து அவர்கள் உறக்கம் ஒருநாளைக்கு சில மணிநேரங்களோ அல்லது அதுகூட கிடைக்கிறதோ என்று சந்தேகம்தான். பல நாட்கள் உறங்காமல் கூட வேலை செய்கிறார்கள்.தொடரந்து உழைப்பதால் அதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் ஏராளம். அதை வெளிக்காட்டவும் முடியாமல் தன் கடமையை செய்பவர்கள் ஏராளம்.
எனக்கு தெரிந்து எங்கள் மாவட்ட செயலாளர் பதவியேற்று ஒருவருடம் ஆகிறது. நன்றாக உறங்காமல் சாப்பிடாமல் அலைந்தார். விளைவு… அல்சர் நோயாளியாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறார். நமது மா.செக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்பவர்கள் ஏராளம். நாம் பெரும்பாலும் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போதும் சிலரைத் தவிர பலர் வருமானம் ஈட்டியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் தலைவர் கலைஞரின் கண்டிப்பு.

அதிமுக மா.செக்கள் ஆட்சியில் இருக்கும் போது அள்ளோ அள்ளுனு அள்ளுகிறார்கள். ஆட்சியில் இல்லாத போது அதிகாரிகளோடு இணக்கமாகி மீண்டும் அள்ளுகிறார்கள். ஒரு திமுக மா.செ எப்போது வீட்டைவிட்டு போகிறார் எப்போது வருகிறார் என்பது குடும்பத்தினருக்கே தெரிவதில்லை.
மாவட்டத்தில் நடக்கும் நல்லது,கெட்டது,விழாக்கள்,தகராறுகள்,கட்சியினரின் காவல்துறை பிரச்சனைகள்,ஆர்ப்பாட்டம்,பொதுக்கூட்டம், தலைவர் வருகை, அடிக்கடி நடக்கும் அறிவாலய மீட்டிங் அத்துணை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைய திமுக மா.செக்களின் Schedule ஐ பார்த்தால் தலை சுற்றி போகும்.
இவர்களின் பணிச்சுமையை தீர்க்க தலைமை என்ன செய்யலாம்? மாவட்ட செயலாளர்களை மாவட்ட பணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும்படி செய்ய வேண்டும். எந்த மாவட்டத்துக்கு தலைவர் வந்தாலும் பக்கத்து மாவட்ட மா.செக்களும் வரும் நிலை மாறவேண்டும்.மா.செக்கள் வரும் போது குறிப்பிட்ட ஆட்களை அழைத்து வரவேண்டியிருக்கிறது. அவர்களுக்கு பணம்,வாகன,பெட்ரோல், சாப்பாடு செலவுகளை குறைக்கலாம். சிறிய பிரச்சனைகளுக்கு கூட மா.செக்களை அறிவாலயம் அழைக்கும் நிலை மாறவேண்டும்.மா.செக்கள் வரும் போது குறிப்பிட்ட ஆட்களை அழைத்து வரவேண்டியிருக்கிறது.அவர்களுக்கு பணம்,வாகன,பெட்ரோல், சாப்பாடு செலவுகளை குறைக்கலாம்.
அத்தியாவசியமில்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல்கள் செய்வதை குறைக்க வேண்டும். இதற்கு ஆகும் செலவுகளும் மா.செ தலையில்.கூட்டணி கட்சியும் சேர்ந்தால் அவர்களுக்கும் தெண்டம் அழுக வேண்டும்.
தலைவர் மாவட்டத்துக்குள் வந்தால், பொதுக்கூட்டம் நடத்தினால் கூட்டம் காட்டுவதற்காக பொதுமக்களை காசு கொடுத்து அழைத்து வரும் பழக்கத்தை மாற்றவேண்டும்.
அதனால் மிகப்பெரிய தொகை செலவு செய்யப்படுகிறது. தளபதி வந்தால் கூட்டம் தானாக வருகிறது. பிறகெதற்கு செயற்கை கூட்டங்கள்.
எல்லா மாவட்டத்திலும் கோஷ்டி பூசல் இருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட கோஷ்டிகள் அறிவாலயம் பறக்கிறார்கள்.அங்கு மா.செவும் அழைக்கப்படுகிறார். அறிவாலய ஆண்டவர்கள் முன் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது.அதில் இருவரும் கப்பம் கட்டுகிறார்கள்
இந்த நிலை மாறனும். ஒரு பயலும் அவசியமில்லாமல் அறிவாலயத்துக்குள் நுழையக்கூடாது என்று தலைவர் ஆணையிட வேண்டும். ஒரு மாவட்டத்துக்கு மா.செ தான் எல்லாம். அவரோடு சேர்ந்துதான் மாவட்ட கழகம் பயணிக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மா.செ தவறு செய்தால் புகார்கள் தலைமைக்கு அனுப்பப்படவேண்டும். அதை விசாரித்து குறிப்பிட்ட தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மா.செக்கள் விருப்பப்பட்டு தரும் நிதியை வாங்க தடை போடக்கூடாது.
தங்கள் நிகழ்ச்சிகளை, தங்களைப்பற்றிய செய்திகளை முரசொலி,கலைஞர் டீவியில் செய்தியாக வருவதற்கு மா.செக்கள் தரும் அன்பளிப்பு அதிகம்.
அன்பளிப்பு வாங்கும் முரசொலி, கலைஞர் டீவி பணியாளர்களை அதன் நிர்வாக தலைவர் அழைத்து கண்டிக்கவேண்டும்.
எதிர்க்கட்சிகளை சமாளிப்பதைவிட கோஷ்டி பூசல்களை சமாளிக்க முடியாமல் மா.செக்கள் தடுமாறும் நிலையை மாற்றி உடனுக்குடன் கோஷ்டிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மா.செக்களின் அன்றாட கஷ்டங்கள் தலைமைக்கு தெரிகிறதா? தெரியப்படுத்தப்படுகிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக