திங்கள், 30 செப்டம்பர், 2019

நாங்குநேரி: அதிமுக ஜாதி கணக்குகள் .. வருத்தத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி ..

மின்னம்பலம் : நாங்குநேரி: அதிமுகவின் சாதிச் சடுகுடு!நாங்குநேரி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அணியில் லேசாகத் தொடங்கிய சலசலப்பு இப்போது முற்றி முதிரத் தொடங்கியிருக்கிறது.
எங்களை சந்தித்து ஆதரவு கேட்டால் முடிவு செய்வோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறிய பிறகே விஜயகாந்தை அமைச்சர்கள் சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். அதேபோல பாஜகவோ, அதிமுகவுக்கான ஆதரவு பற்றி முடிவு செய்யவில்லை என்று நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக அறிவித்துள்ளது.
இந்த வரிசையில் அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை இடைத்தேர்தல் விவகாரத்தில் அமைதியாகவே உள்ளார். அவரையும் அதிமுக தலைவர்கள் தேடிச் சென்று சந்திக்கவில்லை.
இதுபற்றி நாங்குநேரி தொகுதியில் விசாரித்தபோது,

“விக்கிரவாண்டி தொகுதியில் புதிய தமிழகத்தின் ஆதரவு என்பது அதிமுகவுக்கு ஒரு பொருட்டு அல்ல. ஏனெனில் அங்கே புதிய தமிழகத்துக்கு அடிப்படை இல்லை. ஆனால், தென் மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு பத்து சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய வாக்கு வங்கியாக தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள் இருக்கின்றன. ஆனாலும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை சந்திக்கவோ, பரப்புரைக்கு அழைக்கவோ இன்னமும் அதிமுக தயாராக இல்லை. இதனால் டாக்டர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
இதற்கான காரணம் என்பதை அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அது டாக்டருக்கு மேலும் நெருடலாகிவிட்டது. அதாவது நாங்குநேரியில் தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளுக்கு இணையாக தேவர் இன வாக்குகளும் உள்ளன. அமமுக இந்த முறை தேர்தல் களத்தில் இல்லை. எனவே டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக சார்பாக பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தால், தேவர் இன வாக்குகள் முழுமையாக தமக்கு விழுமா என்று அதிமுக சந்தேகப்படுகிறது. இதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமியை இன்னும் அதிமுக தலைவர்கள் சந்திக்கவில்லை என்கிறார்கள். ஆக தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளை லோக்கல் அட்ஜெஸ்மென்ட் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக டாக்டர் வந்தால் முக்குலத்து வாக்குகளை திமுக காங்கிரஸ் கைப்பற்றிவிடுமோ என்பதற்காகவே இந்த சாதிச் சடுகுடு நடத்தப்படுகிறது” என்கிறார்கள் நாங்குநேரி அதிமுக, திமுக வட்டாரங்களில்.
ஏற்கனவே பாஜகவோடு முறுகல் போக்கு முளைக்கத் தொடங்கியுள்ள நிலையில்.புதிய தமிழகத்தோடும் முரண்படத் தொடங்கிவிட்டதா அதிமுக என்ற கேள்வியும் இதன் மூலம் எழுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக