புதன், 18 செப்டம்பர், 2019

BBC : புலி உறுப்பினரின் மகனா ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல்தாரி ஆசாத் - உண்மை என்ன?

பஷீர் சேகுதாவூத்
ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்தாரி தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரின் மகனா?இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது என்பதை, பஷீரின் பதிவுக்கு எழுதப்பட்ட கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார்.

சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும், அதற்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும், பஷீர் சேகுதாவூத் தனது பதிவில் விவரித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பிபிசி தமிழ் பலரைச் சந்தித்தது.

ஆசாத் – நடந்த கதை

அதற்கு முன்னர், ஆசாத் பற்றிய தகவல்களை அறிந்திருந்தல், இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர் தொடர்பில் சுருக்கமாக சில தகவல்களை இங்கு வழங்குகின்றோம்.

< மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 34 வயது. அவரின் தயாரின் பெயர் லத்திபா பீவி, தந்தை நஸார். இருவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்.
அம்பாறை மாவட்டம் கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியில் ஆசாத் திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா. இவரும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் உறவினர்களுடன் சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலியாகி விட்டார்.
சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்த பின்னர், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆசாத்தின் தலை உள்ளிட்ட உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றினை அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.
இதனையடுத்து, மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆசாத்தின் உடற்பாகங்களை ஆகஸ்ட் 26ஆம் தேதி போலீஸார் அடக்கம் செய்தனர். ஆனால் அந்தப் பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, குறித்த உடற்பாகங்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆசாத்தின் உடற்பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைவாக கடந்த 2ஆம் தேதி, கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடற்பாகங்களை போலீஸார் தோண்டியெடுத்தனர்.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்கொலைக் குண்டுதாரி ஆசாத்தின் உடற்பாகங்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த உடற்பாகங்களை எதிர்வரும் 26ஆம் தேதிக்குள் அடக்கம் செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலி உறுப்பினர் நஸார்

ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர். சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

ஆசாத்தின் தந்தை நஸார், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு வந்ததாக, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் பிபிசி தமிழ் இடம் தெரிவித்தார்.
அவ்வாறு புலிகள் இயக்க உறுப்பினராகச் செயற்பட்டமைக்காகவே, 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் வைத்து, அப்போது ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் நஸார் கொல்லப்பட்டதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் கூறினார்.
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் சுமார் 10 வருடங்கள் அஸ்பர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டு காத்தான்குடி 5ஆம் பிரிவு – கிளினிக் வீதியில் அமைந்துள்ள தன்னுடைய மூத்த சகோதரியின் வீட்டில் வைத்து, நஸார் மீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
“நானும், எனது தாயாரும், என்னுடைய சிறிய வயது பிள்ளைகளும் வீட்டில் இருந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்குப் பின் பக்கம் நஸார் கத்தும் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்தார். யாரோ சிலர், அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்”.
“காயப்பட்ட அவரை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினோம். அப்போது அங்கு திடீரென வந்த ஒருவர், வெட்டுக் காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஸாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார். நஸாரின் உயிர் பிரிந்து விட்டது” என்று, 29 வருடங்களுக்கு முன்னர், நஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார் அவரின் மூத்த சகோதரி சுபைதா உம்மா.

ஆனாலும், நஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்கிறார் அவர்.
நஸாரின் மூத்த சகோதரியை காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டில்தான் நாம் சந்தித்துப் பேசினோம். அது உயரம் குறைந்த – ஒரு சிறிய வீடு. நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் தரையை கையால் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தில் நஸாரை கிடத்தியிருந்த போதுதான் அவரின் உயிர் பிரிந்தது” என்றார்.
நஸாரின் பெற்றோருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நால்வர் ஆண்கள். நஸார் எப்போது பிறந்தார் என சுபைதா உம்மாவுக்கு நினைவில்லை. ஆனாலும் அவர் கூறிய சில தகவல்களை வைத்து 1957ஆம் ஆண்டு நஸார் பிறந்திருக்கலாம் என அனுமானிக்க முடிந்தது
நஸார் கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபரொருவரும் ‘அந்த சம்பவம்’ பற்றி பிபிசி தமிழ் இடம் பேசினார். ஆயினும், தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



“1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், எங்கள் வீதியில் போலீஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இரவு வேளைகளில்தான் அங்கு போலீஸார் வருவார்கள். நஸார் மீது காலை 11.00 மணியளவில் அந்தத் தாக்குதல் நடந்தது. புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தமைக்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்” என்றார் அந்த அயல்வீட்டுக்காரர்.

நஸாரின் ஜனாஸாவுக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தது என்றும், அந்தப் பள்ளிவாசலுக்குரிய மையவாடியில்தான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆரம்பத்தில் நஸார் கைத்தறியில் நெசவு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக