ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

சட்டப்பிரிவு 370 நீக்கம்: அரசியல் சாசன அமர்வு அமைப்பு!

சட்டப்பிரிவு 370 நீக்கம்: அரசியல் சாசன அமர்வு அமைப்பு!
minnambalam.com : நீதிபதி என்.வி.ரமணா
தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28ஆம் தேதி தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனால் தற்போது வரை காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுத் துறை வட்டாரங்கள் இயல்பு நிலை திரும்பி வருவதாகத் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும்,
வீட்டுக் காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கவும், பத்திரிகையாளர்களைக் காஷ்மீரில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
தேசிய மாநாட்டு எம்.பி.க்கள் பாரமுல்லாவைச் சேர்ந்த முகமது அக்பர் லோன், அனந்த்நாக்கைச் சேர்ந்த ஹஸ்னைன், காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, அப்துல் நசீர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான மனுக்கள் அனைத்தும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வரும் அக்டோபர் முதல் வாரம் முதல் விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர். தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் மூத்த நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர் காவே, சூர்யகாந்த் ஆகிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் முதல் வாரம் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக