செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

வெற்றியை எதிர்த்து வழக்கு: ரவீந்திரநாத்துக்கு உத்தரவு!

வெற்றியை எதிர்த்து வழக்கு: ரவீந்திரநாத்துக்கு உத்தரவு!மின்னம்பலம் : தேனி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ரவீந்திரநாத் குமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைவிட 76,693 அதிகம் பெற்று வெற்றியடைந்தார். தமிழகத்தில் அதிமுக வெற்றிபெற்ற ஒரே இடமும் அதுதான். ஆனால், ரவீந்திரநாத்தின் வெற்றியில் எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.

ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “வேலூர் தொகுதியில் கைப்பற்றப்பட்டது போலவே தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டியிலும் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், வேலூர் தேர்தலை மட்டும் ரத்து செய்த தேர்தல் ஆணையம், தேனிக்குத் தேர்தல் நடத்தியது ஒருதலைபட்சமானதாகும்” என்று தெரிவித்திருந்தார். தேனிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தேர்தல் அதிகாரி, ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக