செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா ? - தமிழகக் குரல்!

கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்?  - தமிழகக் குரல்!காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை நீக்கியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, பிடிபி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் இதுதொடர்பான மசோதா 125 வாக்குகளுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது. நேற்று மாலை இம்மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு இந்தியாவைத் தாண்டி தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி
கடந்த 2018 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு தற்காலிகமானது அல்ல. ஆனால், நிரந்தரமானது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் காஷ்மீர் சட்டமன்றத்தின் அனுமதியைப் பெறாமல் எதுவும் செய்ய முடியாது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கும் உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
370ஆவது பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகப் படுகொலையை பாஜக செய்திருக்கிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று ஒரு கறுப்பு நாள். பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயலை மாநிலங்களவையில் அதிமுக ஆதரித்திருப்பது வெட்கக் கேடானது. பாஜகவின் வகுப்புவாத பாசிச நடவடிக்கைக்கு அதிமுக துணைபோயிருப்பதை எவரும் மன்னிக்க மாட்டார்கள்.
சிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பதாகும். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். 370இன்படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அதிகார மமதையில் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையாகும். மாநில அரசுகள், மாநில உரிமைகள் மீது பாஜக அரசு நடத்திவரும் கோரத்தாண்டவத்தின் ஒரு பகுதியே காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையாகும்.
சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வுகாண வழிமுறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தைப் பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மத்திய அரசின் ஜனநாயக விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
விசிக தலைவர், திருமாவளவன்
மோடி அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்திருக்கிறது. அமைதியைச் சீர்குலைப்பதன்மூலம் ஆட்சியின் அலங்கோலங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. அதற்காக காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறது. இதை ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்
இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றை மட்டும் கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப் பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
மமக தலைவர், ஜவாஹிருல்லா
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரில் ஒரு சதுர அடி சொத்து கூட வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. அதற்குக் காரணமான அரசியல் சாசன சட்டம் 370 மற்றும் 35ஏ சட்டங்களை நீக்குவதன் மூலம், ஜம்மு காஷ்மீரைக் கொத்து கொத்தாகப் பலி கொடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விருந்து வைக்கவும், காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை நிர்கதியாக்கவே இந்தச் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியுள்ளது.
நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பாஜக அரசின் இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த நாள் “நமது நாட்டின் ஜனநாயகத்தின் கறுப்பு நாளாகும்.”
தவாக தலைவர், வேல்முருகன்
இது ஒரு மாபெரும் ஜனநாயகப் படுகொலை. இதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இந்த நிலை தமிழகத்துக்கும் ஏற்பட வெகு காலமாகாது என்பதை எச்சரிக்கையாக தமிழக மக்கள் முன் வைக்கிறோம்.
370ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது மூலமாக காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, வேற்றுமை ஒழிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அம்மக்களின் உரிமையைப் பறிப்பதாக இருந்தது. அதை நீக்கியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று கறுப்பு நாள் அல்ல. வேற்றுமையைச் சுட்டெரித்த நெருப்பு நாள்” என்று தெரிவித்துள்ளார் தமிழிசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக