சனி, 3 ஆகஸ்ட், 2019

காஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும், ஜம்முவை தனி மாநிலமாக தக்கவைக்கவும், மத்திய அரசு முடிவு?

தினமலர் : ஜம்முவை மாநிலமாக்கவும் மத்திய அரசு யோசனைlt; ஸ்ரீநகர் : ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும், ஜம்முவை தனி மாநிலமாக தக்கவைக்கவும், மத்திய அரசு முடிவு செய்திருப்ப தாக, நேற்று இரவு, உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. 'ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்க, மத்திய அரசு ரகசிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது' என்ற வதந்தி, அந்த மாநிலத்தில், சூறாவளி போல வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், 'அமர்நாத் யாத்ரீகர்கள், எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வெளியேறுங்கள்' என, மாநில அரசு எச்சரித்துள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின், 35 A மற்றும், 370 பிரிவுகள், இதற்கான சலுகையை அளிக்கிறது. இதன்படி, அந்த மாநிலத்தில் பிறர், சொத்துகள் வாங்கவோ, வேலை பார்க்கவோ முடியாது. இதை ரத்து செய்து, நாடு முழுமைக்கும், ஒரே சீரான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என, சங் பரிவார் அமைப்புகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக, அந்த மாநிலத்தில் கடும் பீதி நிலவுகிறது.ஏற்கனவே, அங்கு ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த வாரம்,
10 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர்; சில நாட்களில் அவர்கள், அங்கு சென்றடைய உள்ளனர். இந்நிலையில், மேலும், 28 ஆயிரம் வீரர்கள், அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக, கடந்த இரு நாட்களாக செய்திகள் பரவின.

அதை அறிந்த, அந்த மாநில அரசியல் தலைவர்கள், ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா போன்றோர், நேற்று முன்தினம், டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து, 'ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, கேட்டுக் கொண்டனர். நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ஜம்மு - காஷ்மீருக்கு துணை ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவது, வழக்கமான ஒன்று தான்.'வீரர்களின் தேவை, அவர்களின் பணியிட மாற்றம், ஓய்வு போன்ற பல காரணங்களுக்காக, வீரர்கள் மாற்றம் அவ்வப்போது நிகழ்கிறது.

'இதை, இதற்கு முன், வெளிப்படையாக விவாதித்ததில்லை. அதுபோலத் தான் இதுவும்' என,தெரிவித்துள்ளது. எனினும், ஜம்மு - காஷ்மீரில், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, அமர்நாத் யாத்ரீகர்களை உடனடியாக, அங்கிருந்து வெளியேறுமாறு, மாநில, உள்துறை நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம், மாநிலத்தை விட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறுங்கள் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை, ௧ல் துவங்கிய அமர்நாத் புனித யாத்திரை, இம்மாதம், ௧௫ல் நிறையவடைய உள்ளது.

இதற்கிடையில், யாத்திரை செல்லும் வழியில், பாக்.,பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள், ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. பனிமலைகள் சூழ்ந்த பகுதியில், பக்தி கோஷத்துடன் செல்லும் யாத்ரீகர்கள் மீது, பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில், இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை முதல், அமர்நாத் யாத்திரை தடை செய்யப்பட்டுள்ளதாக, துணை ராணுவப்படையினர் அறிவித்துள்ளது, பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில், காஷ்மீ ரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கவும், ஜம்முவை தனி மாநிலமாக வைக்கவும், மத்திய அரசு முடிவு செய்திருப்ப தாக, நேற்று இரவு, உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, நேற்று இரவு முதல், மாநிலம் முழுவதும் மக்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். ஏ.டி.எம்., மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, பெட்ரோல் பங்க்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எந்த நேரமும், மாநிலம் முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப் படுவதால் இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு பதற்றம் நிலவுகிறது.< காஷ்மீரில் பிரதமர் உரை? சுதந்திர தின உரையை, பிரதமர்கள், டில்லி செங்கோட்டையில் தான் ஆற்றுவது வழக்கம். ஆனால், இந்த முறை, வழக்கத்திற்கு மாறாக, காஷ்மீரில், பிரதமர் மோடி, உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகத் தான், கூடுதல் படை வீரர்கள், அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என, நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக