வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பணம் எங்கே உள்ளது? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!

மின்னம்பலம் : பணம் எங்கே உள்ளது? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!பிரதமரின் சுதந்திர தின உரையைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று (ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதன் பின்னர் உரை நிகழ்த்திய பிரதமர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்களை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது காங்கிரஸ்.
ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம் என்பது தற்போது உண்மையாகிவிட்டதாகவும், இதற்காக நாடு பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ், “ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம் என்பது மோடி அரசாங்கத்தால் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து எறியப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவை நீக்கியது ஒருதலைபட்சமான ஜனநாயகத் தன்மையற்ற செயல். இந்த “ஜனநாயக” அரசானது அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை நினைக்கும்போது ஒருவித நடுக்கமாகத்தான் உள்ளது” என விமர்சித்துள்ளது.
ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவுக்கு ஜிஎஸ்டி உயிர் கொடுத்தது என்று தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர், தற்போது ஒரே தேசம், ஒரே தேர்தலைப் பற்றி யோசித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ், “ஜிஎஸ்டி வரி ஐந்து வகையாக இருப்பதால் அது ஒரே தேசம், ஒரே வரி என்ற நிலையிலிருந்து வெகு தொலைவில் விலகி நிற்கிறது. பிரதமருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். மோசமான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. அதோடு பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், “பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் கவனத்தை உங்களுக்கு சாதகமாக ஈர்க்க முயற்சி செய்கிறீர்கள். பொருளாதாரத்தின் நிலை மற்றும் தற்போதைய உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆகும் செலவுகளைக் கருத்தில்கொள்ளும்போது எங்களுக்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான பணம் எங்கே உள்ளது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
மேலும் பிரதமர் தன்னுடைய உரையில், “சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் பொருளாதாரத்தின் நிலை 2 ட்ரில்லியன் டாலராக இருந்தது. ஆனால் 2014க்கும் 2019க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில் அதனை 1 டிரில்லியன் டாலர் அதிகப்படுத்தி 3 டிரில்லியன் டாலராக ஆக்கியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதை விமர்சித்துள்ள காங்கிரஸ், “மோடி அவர்கள், இந்தியப் பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக உள்ளதாகப் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தியர்களின் தொடர் முயற்சியாலும், விவேகமாகச் செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களாலும், முந்தைய அரசாங்கங்களின் வெற்றியினாலுமே அந்த இலக்கு எட்டப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக