வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

நீதானே பொண்ணுங்கள அப்படிப் பண்ணுன!’- சிறையில் மோதிக்கொண்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்?

Pollachi rapistjailவிகடன் -எம்.புண்ணியமூர்த்தி - வீ கே.ரமேஷ் : பாதுகாப்பு காரணமாக கோயம்புத்தூர் மத்திய சிறையிலிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஐந்து பேரும் சிறைக்குளேயே தங்களுக்குள் மோதிக்கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்கள் சிலரை காதல் என்கிற போர்வையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய அரக்கக் கும்பலை தமிழக மக்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய இந்த வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேர் மட்டும்தான் குற்றவாளிகளா? இல்லை வேறு நபர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? இந்தக் கும்பலில் மொத்தம் எத்தனைபேர் இருக்கிறார்கள்? இவர்களோடு அரசியல் புள்ளிகளின் வாரிசுகளுக்கும் தொடர்பு உள்ளதா?
இப்படி பல சந்தேகங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கு, லோக்கல் போலீஸ், சிபிசிஐடி என அடுத்தடுத்து கைமாறி இப்போது சிபிஐ வசம் இருக்கிறது. பொள்ளாச்சியில் தங்கி பல்வேறு கோணங்களில் ரகசிய விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ கடந்த மே 24-ம் தேதி, பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.



இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் கடந்த ஜூன் மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். ஏன் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களாக சிறை மாற்றப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில்தான் சேலம் மத்திய சிறைக்குள்ளேயே குற்றவாளிகள் ஐந்துபேரும் தங்களுக்குள் மோதிக்கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து சேலம் மத்திய சிறைக் காவலர்கள் சிலரிடம் பேசினோம். “அவர்கள் ஐந்துபேர் மீதும் குண்டாஸ் போடப்பட்டிருந்ததால் உயர் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்குள் மிகவும் சோகத்துடனேயே இருந்துவந்த அவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.


Pollachi rapist
அந்த வாக்குவாதம் முற்றி ஒருநாள் திடீரென்று கைகலப்பாக மாறிவிட்டது. குறிப்பாக ரிஷ்வந்த் என்கிற சபரிராஜனை மற்ற நான்கு பேரும் சேர்ந்து தாக்க முயற்சி செய்துள்ளார்கள். ‘பெண்களை அழைத்துச் சென்று இப்படியெல்லாம் செய்தது நீதான். உன்னால்தான் எல்லா பிரச்னையும். ஒழுங்காக நீதிபதியிடம் நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஒப்புக்கொள்’ என்று கோபத்தோடு சபரிராஜனை தாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதையடுத்து சபரிராஜன் மட்டும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
யார் குற்றவாளிகள் என்று சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் இந்தவேளையில், சிறைக்குள் எல்லாவற்றுக்கும் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி சபரிராஜன் மற்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக