புதன், 28 ஆகஸ்ட், 2019

ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை : நிறைவான சொத்து... முறையான வரி... சிறிய குடும்பம்!

P Chidambaram
P Chidambaramvikatan.com - தினேஷ் ராமையா : எங்களுக்கு எதிராக ஓர் ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா என அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சவால் விடுத்திருக்கிறார்கள்.
 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையை ப.சிதம்பரம் எதிர்கொண்டு வருகிறார். சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக முன்ஜாமீன் பெற்றுவந்த சிதம்பரத்துக்குக் கடந்த 20-ம் தேதி முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவருக்கான 5 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவர், தற்போது சி.பி.ஐ கஸ்டடியில் இருக்கிறார். இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை கைது செய்ய நாளை (28.8.2019) வரை தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.<
இந்த நிலையில், ஊடகங்கள் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,``ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை. உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்வரை, அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்.
பல நாடுகளில் சொத்துகள், வங்கிக் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ப.சிதம்பரம் பொதுவாழ்வில் இருக்கிறார். இதன்மூலம் அவருக்குக் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. நிறைவான சொத்துகளைக் கொண்டு, முறையாக வருமானவரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள். வெளிநாடுகளில் சொத்துகள், பல்வேறு வங்கிக் கணக்குகள், போலி நிறுவனங்களை வைத்திருக்கிறோம் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுகள் கட்டுக்கதைகளே. ஒருநாள் இவையனைத்தும் உண்மை இல்லை என்பது நிரூபிக்கப்படும். இவை குறித்த ஓர் ஆதாரத்தையாவது அரசால் காண்பிக்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக