திங்கள், 26 ஆகஸ்ட், 2019

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் செயல் ...மு.க.ஸ்டாலின் அறிக்கை

தினகரன் :  சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில்  சென்றுகொண்டிருந்த  போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக பாண்டியனை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், நேற்று மாலை இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட  கலவரத்தில் காவல் நிலையம் எதிரே நின்றிருந்த ஜீப்பை அடித்து உடைத்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். பின்னர் காவல் நிலையம் முன்பு கலவரக்காரர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.  அப்போது மற்றொரு தரப்பினர் காவல் நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை முற்றிலும் உடைத்தனர்.


தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக தமிழக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை இன்று காலை நிறுவப்பட்டது. ஆனாலும், வேதாரண்யத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அம்பேத்கர்  சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அம்பேத்கர் சிலை உடைப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை வேதாரண்யத்தில் வஞ்சக  நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் கண்டனத்துக்குரியது. தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும்  இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும். ஜனநாயக அரசியல் முகமூடி அணிந்த பாசிச சக்திகளின் விஷ விதைகள் தந்தை  பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சிதைப்பது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக