புதன், 28 ஆகஸ்ட், 2019

பியூஷ் மனூஷ் மீது பாஜகவினர் தாக்குதல்!

பியூஷ் மனூஷ் மீது பாஜகவினர் தாக்குதல்!மின்னம்பலம் : சேலம் பாஜக அலுவலகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய சூழலியலாளர் பியூஷ் மனூஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்சினைகளில் முன்னின்று குரல் கொடுத்து வருபவர் சூழலியலாளர் பியூஷ் மனூஷ். சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு இன்று மாலை (ஆகஸ்ட் 28) சென்ற பியூஷ் மனூஷ், அதனை தனது முகநூல் பக்கத்திலும் நேரலையாக பகிர்ந்தார்.
பாஜக அலுவலகத்தின் முதல் மாடிக்குச் சென்று அங்கிருந்த நிர்வாகி ஒருவரிடம், “எனக்கு பேஸ்புக்கில் மெசெஜ் மூலமாக மணிகண்டன் என்ற நபர் மிரட்டல் விடுத்துவருவதாகவும், அவருக்கும் உங்களுக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா” என்று பியூஷ் மனூஷ் கேட்கிறார். அதற்கு நிர்வாகியோ, ‘நீங்கள் இப்படி பேசினால், மணிகண்டனும் அப்படித்தான் பேசுவார்’ என்று பதிலுக்கு அவர் கூறுகிறார். இது காஷ்மீர் விவகாரம், மத்திய அரசின் செயல்பாடுகள், ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.76 லட்சம் கோடியை பெற்றது போன்ற விஷயங்கள் நோக்கி நகர்ந்தது.

அப்போது பாஜக நிர்வாகி, ‘நீ என்ன தொழில் செய்யுற, உனக்கு ஏது வருமானம்’ என்று கேட்க, பியூஷ் மனூஷ், “நான் ஒரு விவசாயி” என்று பதிலளிக்கிறார். உடனே, ‘கணக்கு பாப்போமா...விவசாயம் பார்க்கும் உனக்கு எப்படி சொத்து வந்தது. ராஜஸ்தான்ல இருந்து வரும்போதே சொத்து வாங்கிட்டு வந்தியா” என எகிறுகிறார் அந்த நிர்வாகி. ஒரு கட்டத்தில் பியூஷ் மனூஷுடன், அங்கிருந்த பாஜக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அங்குவந்த சிலர், பியூஷ் மனூஷுக்கு செருப்பு மாலை அணிவித்து, தீவிரவாதிகளை உருவாக்கும் தலைவர் என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து அவரை சூழ்ந்துகொண்டு தாக்கவும் தொடங்குகின்றனர். இதனால், ஒரு கட்டத்தில் பியூஷ் மனூஷ் மயக்கமடைந்து நின்றார். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அவரை, பாஜகவினரிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், காவல் துறையினர் தடுத்தும் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து தாக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர். காவல் துறையின் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பியூஷ் மனூஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் பியூஷ் மனூஷ்தான் பாஜகவினரை தாக்கியதாகத் தெரிவித்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத் தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக