வியாழன், 29 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள்: அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் - மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள்: அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் - மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுதினத்தந்தி : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. புதுடெல்லி, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.


இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த ஜனாதிபதியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், மாநில சட்டசபையின் அனுமதியின்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், சட்டரீதியாக தவறானது என்றும், எனவே ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கூறப்பட்டு இருந்தது.

மேலும் காஷ்மீரைச் சேர்ந்த வக்கீல்கள் ஷகீர் ஷபிர், சோயப் குரேஷி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி ஆகியோரும் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சிலரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அனைத்து மனுதாரர்கள் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்களை வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர். அத்துடன், இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கும், காஷ்மீர் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த வழக்கில் இங்கு பேசப்படுபவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபை வரை செல்லும் என்றும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு நாட்டின் எல்லையை கடந்தும் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்றும், தங்கள் உத்தரவை மாற்ற முடியாது என்றும் கூறிவிட்டனர்.

இதேபோல் அனுராதா பாசின் என்ற பத்திரிகை ஆசிரியர் தாக்கல் செய்த மனுவில், காஷ்மீரில் இணையதளம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் ரத்து செய்யப்பட்டு பத்திரிகை நிருபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதை நீக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதே கோரிக்கையை முன்வைத்து தெஹ்சீன் பூனாவாலா என்பவரும் ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடர்பாக 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த மனுவில், காஷ்மீரில் உள்ள தங்கள் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க விரும்புவதாகவும், இதற்காக அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் செல்லும் போது வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி ஈடுபட்டால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கியதற்கு, மத்திய அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றொருவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிதோடு, ஆட்சேபத்தை நிராகரித்தனர்.

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அனந்தநாக்கில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், எனவே அங்கு செல்ல தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சையத் என்பவர் தாக்கல் செய்த மனுவும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், பெற்றோரை சந்திக்க அனந்தநாக் செல்வதற்கு சையதுக்கு அனுமதி வழங்கியதோடு, அவருக்கான பயண ஏற்பாடுகளை செய்யவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக