சனி, 3 ஆகஸ்ட், 2019

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு: மருத்துவ மாணவர்கள் போராட்டம்!

மின்னம்பலம் :  தேசிய மருத்துவ ஆணையத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் போராட்டம் வலுத்து
வருகிறது. கடந்த 31ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 2) வகுப்பைப் புறக்கணித்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மருத்துவத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. முதலில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. இந்திய மருத்துவ ஆணையத்தைக் கலைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாக இயற்றப்படவுள்ளது.
இதன் மூலம் மருத்துவ படிப்பு முடித்த பின்னர் மருத்துவ பயிற்சி பெற நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நெக்ஸ்ட் என்ற புதிய தேர்வையும் எழுத வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு: மருத்துவ மாணவர்கள் போராட்டம்!இதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று அரசுக் கல்லூரி மாணவர்கள், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசுக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய மருத்துவ ஆணையம் குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், “ மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் பாதிக்கப்படும். எப்போதும் அவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்கும். தேசிய மருத்துவ ஆணையத்தில் மருத்துவர்களை நியமனம் செய்யாமல் அரசு பிரதிநிதிகளை நியமனம் செய்து மத்திய அரசு இந்திய மருத்துவத்தைத் தன்வசம் படுத்த நினைக்கிறது. இதனால் மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நல்ல மருத்துவர்கள் உருவாவது தடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
மதுரையைப் போன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தஞ்சை அரசு கல்லூரி மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக