சனி, 3 ஆகஸ்ட், 2019

அமெரிக்க நிறுவனத்துடன் காபி டே பேச்சுவார்த்தை!

அமெரிக்க நிறுவனத்துடன் காபி டே பேச்சுவார்த்தை!மின்னம்பலம் : தனது குழுமத்துக்குச் சொந்தமான தொழில்நுட்பப் பூங்காவை விற்பனை செய்து கடனை அடைக்கும் முயற்சியில் காபி டே நிறுவனம் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய காபி தொழில் நிறுவனமான கஃபே காபி டேயின் நிறுவனர் சித்தார்த்தா கடுமையான கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார். அவரது கடன் சுமை ரூ.11,000 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், கடன் சுமையைக் குறைக்கும் முயற்சியில் காபி டே நிறுவனம் இறங்கியுள்ளது. இதன்படி, பெங்களூருவில் உள்ள காபி டே நிறுவனத்துக்குச் சொந்தமான 90 ஏக்கர் தொழில்நுட்பப் பூங்காவை அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனத்திடம் விற்பனை செய்ய காபி டே நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இதற்கான பேச்சுவார்த்தையை சித்தார்த்தா இருந்தபோது மேற்கொண்டிருந்த நிலையில், மைண்ட் ட்ரீ பங்கு விற்பனையில் கவனம் செலுத்தியதால் இதற்கான ஒப்பந்தம் தாமதமானது.

இந்நிலையில், சித்தார்த்தாவின் கடன் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த தொழில்நுட்பப் பூங்காவை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்தால் ரூ.3,000 கோடிக்கு மேல் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் காபி டேயின் கடன் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளாக்ஸ்டோன் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் உள்ள வர்த்தக இடங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக