வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

தாயுடன் உறங்கிய குழந்தை: வன்கொடுமை செய்து கொலை.. ஜார்கண்ட் டாட்டா ரயில் நிலையத்தில் ....

தாயுடன் உறங்கிய குழந்தை: வன்கொடுமை செய்து கொலை!மின்னம்பலம் : நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிகழ்கின்றன என்பதை அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன. உன்னாவ் சிறுமியை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொலை செய்ய முயன்றது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தலை துண்டிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ரயில் நிலையத்தில் 2ஆம் நடைமேடையில் தனது தாயுடன் ஜூலை 25ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மாயமாகியுள்ளார். இரவு முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததால் ஜூலை 26ஆம் தேதி காலை குழந்தையின் தாய் ரயில்வே காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கூட்டாளி ஒருவரைச் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சாகெப்கஞ்சில் உள்ள ராஜ் மஹாலில் வசிக்கும் மோனு மொண்டல் என்பவர் தனது பெயர் முகமது சேக் என அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து ஏமாற்றிவிட்டார். அவர் குழந்தையைக் கடத்தியிருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் மோனுவை கைது செய்துள்ளனர். பின்னர் ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் தாயுடன் நடைமேடையில் உறங்கிய குழந்தையை இருவர் கடத்தி செல்வது பதிவாகியிருந்தது. அப்போது மோனுவும் அங்கேயே உறங்கிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த சிசிடிவி காட்சியை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பிவைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், ரமாடின் பாகானில் வசிக்கும் ரிங்கு சாஹு என்பவர் குழந்தையைக் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து விசாரணை செய்ததில், தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கடத்தி சென்று தனது நண்பர் கைலாஷ் என்பவருடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், குழந்தை அழுகை நிறுத்தாததால் கழுத்தை நெரித்துக் கொன்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் குழந்தையின் தலையைத் துண்டித்து, உடல் மற்றும் தலையை தனித்தனியே குப்பையில் வீசியதாகவும் கூறியுள்ளார்.
ரிங்கு சாஹு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளியான கைலாஷையும் கைது செய்த போலீசார், குழந்தையின் உடலை ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள முட்புதரில் குப்பைகளுக்கே நடுவே ஒரு பையிலிருந்து மீட்டுள்ளனர். எனினும் குழந்தை தலை இன்னும் கிடைக்கவில்லை, மோப்ப நாய் உதவியுடன் குழந்தையின் தலையைத் தேடி வருகின்றனர். ஆனால், ஜார்க்கண்ட்டில் மழை பெய்து வருவதால் தேடுதலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரிங்கு தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டுவந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2015இல் ஏழு வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரிங்கு சமீபத்தில் பிணையில் வெளியே வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரிங்குவின் தாய் கிரிதிக் மாவட்டத்தில் கான்ஸ்டபிளாக உள்ளார். அப்பா ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 16 வயது பெண் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். குழந்தைகளைக் கடத்தி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரிங்குவை வெளியே கொண்டுவர அவர் தாய் உதவுவதாகவும், இதனால் தொடர்ந்து அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அண்மையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக