புதன், 21 ஆகஸ்ட், 2019

2 மணித்தியாலங்களுக்குள் சி பி ஐ செயலகத்தில் வருமாறு உத்தரவு ... தேடிச்சென்ற சிபிஐ: சிதம்பரம் தலைமறைவு?

மின்னம்பலம் :
தேடிச்சென்ற சிபிஐ: சிதம்பரம் தலைமறைவு?
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஆகஸ்டு 20 மாலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மறுக்கப்பட்டது. உனடியாக ப.சிதம்பரம் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை மேல்முறையீட்டுக்காக அணுகினார்.
இதற்கிடையில் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில மணித்துளிகளில் ஆகஸ்டு 20 மாலை 7 மணிக்கு சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மத்திய அரசின் அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் டீம் டெல்லியில் ஜோர் பக் பகுதியிலுள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்றனர்.
டெல்லி உயர் நீதிமன்றம் தனது முன் ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்து, இதை அவசரமாக விசாரிக்குமாறு கோரப்பட்டது. சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவரச வழக்காக எடுத்துக் கொள்ள வலியுறுத்தி தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தியும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. உச்ச நீதிமன்றப் பதிவாளர், ‘இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது. நாளை (ஆகஸ்டு 21) காலை வாருங்கள்’ என்று கூறிவிட்டார்.

ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தெரிந்த நிலையில் சிபிஐ, அமலாக்கத் துறையினர் உடனடியாக சிதம்பரம் வீட்டுக்கு விரைந்தனர்.
அங்கே சிதம்பரம் இருக்கும் பட்சத்தில் அவரை உடனடியாக கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதே அவர்களின் நோக்கம்.
ஆனால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது ப.சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை. வீட்டு வாசலில் இருந்தபடி சிதம்பரத்தின் அலைபேசி எண்ணுக்கு முயற்சித்தபோது அது ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். சுமார் அரைமணி நேரம் சிதம்பரம் வீட்டில் காத்திருந்த சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சிதம்பரம் வீட்டில் இல்லை, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிய காரணங்களை வைத்து அவர் தலைமறைவாகிவிட்டாரோ என்றும் செய்திகள் பரவி வருகின்றன. உச்ச நீதிமன்றம் நாளை சிதம்பரத்தின் மனுவை விசாரித்து முடிவெடுக்க இருக்கும் நிலையில்... சிதம்பரத்தை இரவுக்குள் கைது செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக