சனி, 17 ஆகஸ்ட், 2019

110 ஆண்டுகளுக்குப்பின் வேலூரில் மிக கனமழை: அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்:

hindutamil.in : வேலூரில் 110 ஆண்டுகளுக்குப்பின் அதிக அளவில் மழை பொழிந்துள்ளது. வெப்பச்சலனம், மேலடுக்குச் சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது. மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு வெதர்மேன் அவரது முகநூலில் வானிலை குறித்து காணொலி ஒன்றை பேசி பதிவிட்டுள்ளார்.
அவரது காணொலியில் தெரிவித்ததாவது:
“பொதுவாக வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் ஆனால் தற்போது ஊட்டி கிளைமேட் உள்ளது. வேலூரில் மிக கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 110 ஆண்டுக்குப்பின் நல்ல மழை பெய்துள்ளது. 110 ஆண்டுக்கு முன் ஒரு நாளில் 106 மி.மீ மழை பெய்தது. அதற்குப்பின் 110 ஆண்டுக்குப்பின் ஆகஸ்ட் மாதத்தில் இன்று 166 மி.மீ மழை பெய்துள்ளது. காலையில் பெய்த மழை அரிதான ஒன்று என சொல்லலாம்.
அதிகாலை 3 மணியிலிருந்து 7 மணி வரை மிக கனமழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவ காலத்தில் காலை நேரத்தில் பொதுவாக மழை பெய்யாது. ஆனால் இன்று வலுவாக காலை நேரத்தில் மழை பெய்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் இரவு நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேகங்கள் உருவாகி வந்தது.
தமிழகத்தில் கரையோரத்தை ஒட்டி மேலடுக்கு சுழற்சி உருவானது. அதனால் மேகங்கள் ஒன்று திரண்டு நீண்ட நேர மழையை கொடுத்து வருகிறது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் மிக கன மழையைக் கொடுத்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீட்டர் முதல் 150 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.< தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மாவட்டம் இல்லாமல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக பெய்யும் மழையில் இது நல்ல மழை என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த நாள் என்று சொல்லலாம்.
இன்று இரவும் இதேபோன்று மழைப்பெய்ய வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில், நள்ளிரவுக்குமேல் நேற்று எப்படி பெய்ததோ அதேப்போன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது காணொலி பதிவில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக